கூடுதல் என்பது களிப்பு Boone Literary Camp



ஒவ்வொருமுறை ஊட்டி முகாம் பற்றி படிக்கும் போதும், ஒருமுறையாவது அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று என் மனைவியிடம் புலம்பியிருப்பதால், அவளே, பூன் இலக்கிய முகாம் பற்றிய அறிவுப்பு வந்தவுடன் சிறிதும் நேரமெடுக்காமல் என் பெயரை பதிந்து கொள்ள சொன்னாள். மூன்று நாட்கள் இலக்கிய முகாமிற்கு போகிறேன் என்று ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தேன். என் நண்பர்களுக்கு, உடன் பணிபுரிபவர்களுக்கு நான் ஒரு வினோத ஜந்து போல ஆகிப்போயிருந்தேன். நண்பர்களும், குடும்பத்தாரும் என்னை பீதியுடனும், வியப்புடனும், பொறாமையுடனும் பார்க்கத்தொடங்கிருந்தனர். காதலில் விழுந்த ஒருவனுக்கு உலகமே இனிப்பது போல், எனக்கு ஒவ்வொரு நாளும் இனித்து வழிந்தது. 
பதட்டத்தில் நான் விமான டிக்கெட்டை முதலில் சரியாக வாங்கி பின் சரிபார்க்கிறேன் பேர்வழி என்று ஒருநாள் தாமதமாக சார்லோட் விமானநிலையத்தில் இறங்குவதாக தவறாக மாற்றிவிட்டேன். வேங்கட பிரசாத் (விபி) என்னை தொலைபேசியில் அழைத்து, என்னை அவரது வீட்டிற்க்கு வரவேற்ற போதுதான், என் விமான டிக்கெட் தவறானது என்றே எனக்கு புரிபட்டது. மீண்டும் அவசரமாக அதிக பணம் செலவழித்து சரியான நாளில் வட கரோலினா சென்று சேர்வது போல் யுனைடெட் விமானத்தில் நியூ ஜெர்சி வழியாக விமான டிக்கெட் வாங்கி, விபியிடம் அவர் வீட்டிற்கு வருவதாக உறுதி செய்தேன். 
வட கரோலினா விமான நிலையத்தில் இருந்து என் தோழியின் வீட்டிற்கு சென்று சில மணிநேரங்கள் செலவிட்டு பின் விபியின் வீட்டிற்கு 3 மணி அளவில் சென்றேன். அங்கு விபியின் குடும்பத்தாரையும் ஸ்ரீகாந்த்தையும் சந்திந்தேன். விபியின் மனைவி தந்த பாயசத்தை சுவைத்து முடிக்கும் முன், இரண்டு கார்களில் 6 மணி நேர பயணத்திற்கு பின் நண்பர்கள் வந்துசேர்ந்தார்கள். அனைவருக்கும் விபியின் மனைவி விருந்து சமைத்திருந்தார்கள். ஒவ்வொருவரும் உரத்த குரலில் சிரித்து மகிழ்ந்து உணவருந்தியது என் கண்ணிலேயே நிற்கிறது. 
திருவிழா மனநிலை எங்கள் அனைவரையும் ஆட்கொண்டிருந்தது என்றுதான் தோன்றுகிறது, விபியின் இரண்டாம் குழந்தை அத்தனை அழகு, அத்தனை செல்லம், அழகு மழலை. அக்குழந்தை எங்களை வழியனுப்பதை பார்க்கையில் எப்படி விபி அக்குழந்தைக்கு விடை கொடுத்து எங்களுடன் வருகிறார் என்பது என் வரையில் ஆச்சரியமாகவே இருந்தது. அத்தனை மகிழ்ச்சியிலும், சந்தடியிலும் சிஜோ அவ்வப்போது யாருக்கோ போன் செய்து பேசிக்கொண்டே இருந்தது பின்தான் தெரிந்தது அவர் அனைவரையும் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வரும் குழுவில் ஒருவரென்பது


விபியின் காரில் என்னுடன் வட கலிஃபோர்னியாவில் இருந்து வந்த விஜயும் சாரதாவும், சான் அன்டோனியோ டெக்சாசில் இருந்து வந்த கோபியும் மற்றும் போர்ட்லாண்டில் இருந்து வந்த ஸ்ரீகாந்தும் ஏறிக்கொள்ள நாங்கள் சிஜோ காரை தொடர தொடங்கினோம். சிஜோ எப்படியாவது எங்களை தொடரமுடியாமல் செய்யவேண்டும் என்று பிரயாசைபட்டு ஒருவழியாக அதில் வெற்றியும் பெற்றார். நாங்கள் பூன் முகாமிற்கு வந்து சேர இருட்டிவிட்டது. விஜயும், கோபியும் என்  அறை தோழர்கள் ஆனார்கள். 

அன்றிலிருந்து மூன்று இரவுகள், இரண்டு பகல்கள் இடைவிடாத நட்பு, திகட்ட திகட்ட உணவு, திகட்டாத இலக்கியம். 


பாலாஜி ராஜுவின் கவிதை அரங்கிற்கு பின்தான் நான் எவ்வளவு தூரம் கவிதையிலிருந்து விலகியிருக்கிறேன் என்பது தெரியவந்தது. இதற்க்கு பின் நான் எதாவது கவிதை எழுதி இம்சித்தால் அதற்க்கு முழு பொறுப்பும் பூன் முகாமிற்கு தான் அதிலும் பாலாஜி ராஜுவுக்கும், எனக்கு புரியும்படி சொன்ன நிர்மலுக்கும் தான். 

நண்பர்களின் அறிமுக பேச்சு, சொந்த கதைகள், ஸ்ரீகாந்தின் புல்லாங்குழல், பழனி, ராஜன் மற்றும் சங்கரின் பாடல்கள், ஜெயின் தத்துவ வகுப்பு, கம்ப ராமாயணம் உட்பட்ட இலக்கிய அமர்வுகள், நண்பர்களுடன் நடை பயணம், அருண்மொழி அக்காவின் சியமந்தக கட்டுரை, சில நண்பர்கள் மழை பொழிந்திருந்த அவ்வேளையில் தீ மூட்ட செய்த எத்தனங்கள், ராஜனும் சௌந்தரும் இயக்கிய வெண்முரசு ஆவணப்படம்  மற்றும் ஜெயின் பேய்க்கதைகள் அத்தனையும் அத்தனையும் பொக்கிஷங்கள்.  

என்வரையில் புதிய மனிதர்களை சந்திப்பதும், மனித கூட்டத்தை பார்த்து ரசிப்பதும் எப்போதும் ஆனந்தம் தருபவை. எனது ஒன்பதாவது வயதில், திருச்சி முக்கொம்பு அருகில் உள்ள திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன விடுதியில் என்னை சேர்த்துவிட்ட  பிறகு நான் எப்போதும் குறைந்த பட்சம் 40 பேருடன் வாழ்ந்து வந்திருக்கிறேன். 

என் பதினாறு வருட அமெரிக்க வாழ்வில் நான் எப்போதும் நண்பர்களுடனேயே வாழ்ந்து வந்திருந்தாலும், இலக்கியம் தெரிந்த 40 நண்பர்களுடன் 3 நாட்கள் என்பது எனக்கு என் பள்ளி பருவத்தை, கல்லூரி காலத்தை திருப்பி கொடுத்தது. இத்தகு இலக்கிய முகாமை ஒருங்கிணைத்த வட கரோலினா நண்பர்கள், ராஜன் சோமசுந்தரம் மற்றும் ஆஸ்டின் சௌந்தர் அவர்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும். 

அடுத்த பூன் முகாமிற்க்காக இப்போதே மனதை, அலுவலகத்தை, நட்பை, சுற்றத்தை தயார்படுத்த தொடங்கியிருக்கும் உங்களில் நானும் ஒருவன். 

Comments

  1. ஸார் கவிதை ஒன்னு சீக்கிரம்
    அடுத்த பூன் முகாமுக்கு இப்போதே தயாரா

    ReplyDelete
  2. ha ha. Poem is too much for me. First I need to read poems.

    ReplyDelete
  3. Anonymous2:11 PM

    Valuable sharing

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மறுவரை செய்யப்படவேண்டிய "வெற்றி" என்பதன் பொருள்

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்