ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்

சென்ற ஒரு வருடத்தில், என் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும், உடன் பணிபுரிபவர்களுக்கும், எனது இலக்கிய ஆர்வமும், ஜெ மேல் நான் கொண்டிருக்கும் பக்தி கலந்த மரியாதையும் புரிந்து விட்டிருந்தது. சிலர் என்னிடம், மே ஜூன் மாதங்களிலேயே இவ்வருடம் பூன் முகாம் உண்டா என்றும், ஜெ அமெரிக்கா வருகிறாரா என்பது பற்றியும் விசாரிக்க தொடங்கிவிட்டார்கள். 




இவ்வருட பூன் முகாம் பற்றிய அறிவிப்பு வந்ததும், மனது சென்ற வருட பூன் முகாமை அசைபோட துவங்கியது. எத்துணை கறாரான வழிமுறைகளுடன் நடத்தப்பட்ட நிகழ்வு, அத்துணை கொண்டாட்டமாக, இன்றுவரை தித்திப்பான நினைவுகளுடனும் என் நினைவில் ஏன் என்று யோசித்தால், ஜெ சொல்வது தான் நினைவிற்கு வருகிறது ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல்’ என வள்ளுவன் வகுத்த வகையிலேயே நிகழ்வுகள் ஒருங்கிணைக்க படுகின்றன. 

ஒவ்வொரு முறை சபரிமலை சென்று அதே ஐயப்பனை தரிசிக்கும் போதும், நமக்கு வாய்ப்பது புதுப்புது அனுபவம். அதேபோல் 2 ம் வருடம் பூன் சென்று சந்தித்த பழைய நண்பர்களும், புதிய நண்பர்களும், மதிப்பிற்குரிய ஜெயும் எனக்கு அளித்தது புத்தம் புதிய அனுபவம். இவ்வருடம் ஜெ சற்று இளைத்து இருந்தார் ஆனால் உற்சாகம் பல மடங்கு கூடியிருந்தது. அவருடன் மாலை நடையில், மிகப்பெரிய முகட்டில் ஏறும்போது  எங்களால் அவருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. 


சென்ற வருடம் போலவே இவ்வருடமும் சிஜோ அனைவரின் பயண விவரங்களை ஒருங்கிணைத்து கொண்டிருந்தார். எனக்கு எப்பொழுதும் சாலை பயணம் உவப்பானது என்பதாலும், சென்ற வருடம் சிஜோ 5 மணி நேரங்கள் தனியாக பயணித்து அட்லாண்டாவிலிருந்து சார்லெட்டுக்கு வந்தது நினைவில் இருந்ததாலும், லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் இருந்து அட்லாண்டா விமான பயண சீட்டு மலிவாக இருந்ததாலும் எனக்கு நேராக அட்லாண்டா சென்று, சிஜோவுடன் சாலை மார்க்கமாக பூன் செல்லலாம் என்று தோன்றியது. சிஜோவிடம் என் விருப்பத்தை தெரிவித்தவுடன், அவர் மிகுந்த உற்சாகமாகி மேலும் பலருடன் விவாதித்து அவர்களையும் அட்லாண்டா வரவழைத்து விட்டிருந்தார். 

அக்டோபர் 4ம் தேதி இரவே, நண்பர்கள் வட கலிபோர்னியா சாரதி மற்றும் விஜய், டல்லாஸ் பாலாஜி மற்றும் நானும் சிஜோ வீட்டிற்கு சென்று சேர்ந்தோம். எங்களுக்கு அவ்விரவே கொண்டாட்டம் தொடங்கியது. 5ம் தேதி காலை சாரதாவும், ராதிகாவும் எங்களுடன் பயணத்தில் இணைந்து கொள்ள, நாங்கள் எழுவரும் பூன் முகாமை நோக்கி சாலை மார்க்கமாக செல்ல துவங்கினோம். சென்றவருடம் ஜெ அமெரிக்கா முழுவதும் சென்ற சாலை பயணத்தில், நான் கிட்டத்தட்ட முழு பயணத்திலும் காரோட்டினேன் என்ற வலுவான காரணத்தினால், இப்பயணத்தில் காரோட்டும் சலுகை, சிஜோவால் எனக்கு அளிக்கப்பட்டது. சாலை பயணத்தில் நண்பர்கள் ஏதேதோ பேசிக்கொண்டு வருகையில், சாரதாவும் ராதிகாவும், முகாமில் விவாதிக்கப்படவுள்ள கவிதைகளையும், கதைகளையும், கார் பயணத்தில் விவாதிக்க ஆரம்பித்தனர். எங்களுக்கு இலக்கிய முகாம் காரிலேயே ஆரம்பித்து விட்டது. 



பூன் முகாமை அடைந்தவுடன், ஒவ்வொரு நண்பர்களையும் ஆரத்தழுவி, சந்தோசத்தை பரிமாறிக்கொண்டபின், ஜெ மற்றும் அருணா அக்காவை சந்தித்தேன். நான் ஜெவை சந்தித்தபோது, எனது மனைவி, மகள் மற்றும் மகனை விசாரித்தபின், நான் தோட்டத்தை தொடர்ந்து பராமரிக்கிறேனா அல்லது அது கோவிட் கால ஆர்வமா என்று விசாரித்து, நான் தொடர்ந்து தோட்டத்தை பராமரிக்கிறேன் என்றவுடன் மகிழ்ந்தார்.


இவ்வருட பூன் முகாமில் பரிமாறப்பட்ட உணவும் தேநீரும், போன வருடத்தை விடவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டிருந்தது. இவ்வருடம் வந்திருந்த நண்பர்கள் ஒரே இடத்தில இருந்த நான்கு விடுதிகளிலும் மற்றும் பதினைந்து நிமிட தூரத்தில் இருந்த இரண்டாம் விடுதியிலும் தங்குவதாக ஏற்பாடு ஆகியிருந்தது. நானும், அட்லாண்டாவிலிருந்து வந்திருந்த மற்ற நண்பர்களும் இரண்டாம் விடுதியில் தங்குவதாக ஏற்பாடு. எங்கள் யாருக்கும் முதல் விடுதியிலிருந்து பிரிந்து செல்லவே மனமில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் கழித்து சென்று, மிகவும் அதிகாலையில் முதல் விடுதிக்கு திருப்புவதை வழக்கப்படுத்திக்கொண்டோம். இருந்தாலும் ஏதோ முதல் விடுதியில் தங்கியவர்கள் எங்களை விடவும் கூடுதலாக ஜெ உடன் நேரம் செலவழிப்பதாகவே எங்களுக்கு தோன்றிக்கொண்டிருந்தது. 

நண்பர்களை சந்தித்து செலவழித்த நான்கு நாட்களுமே (அக்டோபர் 5-8) தொடர் கொண்டாட்டம் என்றாலும், திட்டமிடப்பட்ட இரு நாட்கள் கொண்ட இலக்கிய முகாம் மொத்தமும் அறிதலின் கொண்டாட்டம். சென்ற வருடம், நான் ஜெவுடன் தொடர்ந்து 15 நாட்கள் செலவிட்டிருந்தாலும், ஒவ்வொரு முறை ஜெ பேசும் போதும் அறிந்து கொள்வதற்கு எப்போதும் புதிய விஷயங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஆகப்பெரும் மகிழ்ச்சி என்பது அறிதலே, அதிலும் மனத்துக்குகந்த ஆசிரியரிடம் அருகில் இருந்து அறிவது எப்போதும் நல்லூழ். 

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் வாசித்து வரும் போதிலும், தேர்ந்தெடுத்த இலக்கிய வாசக சபையில் விவாதிக்கையில், என் வாசிப்பின் போதாமையும், மற்ற வாசகர்களின் வேறுபட்ட பார்வைகளும் எப்போதும் என்னை வசியமூட்டுகிறது. ஜெ ஒவ்வொரு படைப்பின் மீதும் அவரது பார்வையை, பொது வாசகன் தவறவிடும் தருணங்களை தொட்டுப்பேசும் போது, அது புதிய வாசல்களை திறக்கிறது. ஒவ்வொரு சிறுகதையும், கவிதையும் கொண்டுள்ள ஆழமான படிமங்கள் என்பது வாசித்து தீராது. ஒவ்வொரு வாசகனின் வாசிப்பும் தனித்துவமானது. 

சென்ற வருட பாலாஜி ராஜுவின் கவிதை அரங்கிற்கு பின்தான் நான் எவ்வளவு தூரம் கவிதையிலிருந்து விலகியிருக்கிறேன் என்பது தெரியவந்தது. ஆனால் இவ்வருடம் என்னால் இசை எழுதிய, வேங்கட பிரசாத் வாசித்த கவிதைகளை உள் வாங்க முடிந்தது. இவ்வருட கவிதைகளை என்னாலும் அனுபவிக்க முடிந்தது. நாங்கள் காரிலே விவாதித்தது அதற்க்கு ஒரு காரணமாக இருக்கலாம், போன வருட பூன் முகாம் என் கவிதை வாசிப்பை திறந்திருக்கலாம். கவிதையை பற்றி பேச சொன்னால் விபி பேசியது அத்தனையுமே கவிதைதான். காதல் என்பது அந்த குழந்தை தான் என்று விவாதிக்கும் போது, அந்த மீசைக்காரன் தான் காதல் என்று ஒரு கருத்து எழுந்து அதற்க்கு ஜெ வைத்த பெரிய கும்பிடு அவ்வறையை சிரிப்பால் நிறைத்தது. எனக்கு இவ்வருட சென்னை ஜனவரி புத்தக திருவிழாவில், இசையின் கவிதைகள் புத்தகம் வாங்குவதென்பது பூன் கவிதை அரங்கில் முடிவாயிற்று. என்னைப்போல் முடிவெடுத்தது எத்தனை பேரோ. 



திரிபுரம் சிறுகதை பற்றிய விவாதம் மிக ஆழமானது. மது இச்சிறுகதையை பற்றிய சிறு அறிமுகம் செய்து அவரது புரிதல்களை பகிர்ந்து கொண்டபோது எனக்கு மிகவும் திகைப்பாக இருந்தது, எவ்வளவு வேறுபட்ட புரிதலுக்கு சாத்தியமானது இச்சிறுகதை என்பது. அதனை ஒட்டிய விவாதத்தில் வந்து விழுந்த வேறுபட்ட கோணங்கள் மற்றும் ஜெ அளித்த புதிய கோணம் (திரிபுராந்தகி) ஆகியவை என்னளவில் இம்முகாமில் நிகழ்ந்த மிகச்சிறந்த கணங்களில் ஒன்று. திரிபுரம், உடன்போக்கு மற்றும் திருவருட்செல்வி கதைகளின் விவாதமும் அதனை ஒட்டி நண்பர் ஒருவர் கோடிட்டு காட்டிய, இம்மூன்று கதைகளுக்கும் உள்ள தொடர்பும்  கால மாற்றமும், ஏன் விவாதம் நிகழ வேண்டும், எப்படி ஒரு விவாதத்தில் பலமுனை வாசிப்பு மற்றும் புரிதல் சாத்தியங்கள் நிகழ்கின்றன என்று என்னை யோசிக்க செய்தது. இப்போது எது என்னையும் மற்றவர்களையும் ஒவ்வொரு வருடமும் இலக்கிய யாத்திரைக்கு தூண்டுகிறது என்பது புரிந்தது. 

நான் மஹாபாரத கதையை பலமுறை என் சிறுவயதில் படித்திருந்த போதிலும், எப்போதும் மஹாபாரதம் பற்றிய பேச்சுக்கள் என்னை  சிறுவயதில் சூழ்ந்திருந்த போதிலும், வெண்முரசு வாசிப்பு எனக்கு எப்போதும் சவாலாகவே உள்ளது. எப்படியாவது அத்தனை நுணுக்கங்களையும், படிமங்களையும் விவரங்கள் குறையாது படித்து புரிந்து விடவேண்டும் என்ற எனது பேராசையால் மீண்டும் மீண்டும் முதற்கனலை(ல்) வாழ்ந்து கொண்டிருந்தபோதிலும், வெண்முரசு முதற்கனல் விவாதங்கள் எனக்கு என் இடம் எது என்பதை காட்டியது. ஜெயஸ்ரீ மற்றும் மதன் ஆற்றிய உரைகள் என்னை மீண்டும் ஒருமுறை முதற்கனல் வாசிக்க தூண்டுகிறது. எனக்கு முதற்கனல் மட்டும் தானா அல்லது என்னால் மேல்கொண்டு சொல்லமுடியுமா என்று திகைப்பாகவே உள்ளது. 

ஒவ்வொரு அமர்விலும், ஒவ்வொருவர் முன்வைத்த பார்வைகளும் ஒவ்வொருவிதமாக இருக்கையில், பழனி வழங்கிய ஆழிசூழ் உலகு நாவல் பற்றிய அவரது பார்வை உணர்வுமயமானது. பழனி அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தார். விவேக் லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு பற்றி ஆற்றிய உரை மிகச்சிறப்பு. அவ்வுரையை விவேக் எழுதி நம் அனைவருடனும் பகிர்வார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் ஆங்கில புத்தகங்கள் படிப்பதில்லை என்றபோதிலும், என்றாவது ஒருநாள் லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு படித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.  

இவ்வருட அமர்வில் ஜெ அளித்த சில பதில்கள் எனக்கான வாழ்க்கை பாடம், முக்கியமாக 

சாரதா கேட்ட "how to disagree, what are the guidelines to observe while disagreeing" என்ற கேள்வியும் 

அதற்க்கு ஜெ அளித்த பதிலும் (நான் இப்படித்தான் புரிந்து கொண்டேன்). 

1. அடுத்தவர் சொன்ன கருத்தில் நமக்கு உடன்பாடான விஷயங்களை முதலில் எடுத்து கூறுதல் 

2. அடுத்தவர் சொன்ன மற்ற விஷயங்களை தொகுத்து சொல்லி அதற்க்கு அவரின் ஒப்புதலை வாங்குதல் 

3. இப்போது மாற்று கருத்தை (அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கை தவிர்த்து, அவர் மனம் புண்படாமல்) எடுத்து சொல்வது 

மொத்த இலக்கிய முகாமிலும் எனக்கு நிகழ்ந்த ஆகச்சிறந்த திறப்பென்பது, வேணு தயாநிதி உரையில் அவர் கோடிட்டு காட்டிய Langue and parole மற்றும் மஹேந்திரனின் எப்படி LLM (Large Language Model) ஜெனெரேட்டிவ் ஏஐஇல் முக்கிய பங்களிக்கிறது என்ற உரையும் அதனை தொடர்ந்து ஜெ அவ்விரண்டு உரையையும் இணைத்து சோசியல் மீடியா டேட்டா தான், இன்றைய ஜெனெரேட்டிவ் ஏஐஇன் Langue என்று சொல்லியபோது. அத்தருணம் தந்த போதை தீர்ந்து போகக்கூடியது அல்ல என்றே நினைக்கிறேன். ஆம் அறிதலே ஆனந்தம், திகட்டாத ஆனந்தம். 



நிகழ்வு முடிந்து விடியற்காலை 2 மணிக்கு புறப்பட்டு, பாஸ்டன் பாலாவும் நானும் கதை பேசிக்கொண்டு சவுத் கரோலினா சென்றடைந்தோம். அட்லாண்டா நண்பர்கள் மீண்டும் என்னை ஞாயிறு மதியம் 2 மணி அளவில் காரில் ஏற்றிக்கொண்டு கதை கதையாய் பேசி, இரவு உணவை அட்லாண்டா இந்திய உணவகத்தில் முடித்து, திங்கள் காலை 4 மணிக்கு நண்பர்கள் பிரபு போர்ட்லேண்ட், பாலாஜி டல்லாஸ் ஆகியோருடன் அட்லாண்டா ஏர்போர்ட் சென்று ஸ்பிரிட் விமானத்தில் ஆரஞ்சு கவுண்டி வந்து சேர்ந்தேன். 


இனி ஒவ்வொரு நாளும், அடுத்த வருட நிகழ்வை எதிர் நோக்கி!





Comments

Popular posts from this blog

மறுவரை செய்யப்படவேண்டிய "வெற்றி" என்பதன் பொருள்

கூடுதல் என்பது களிப்பு Boone Literary Camp