இலக்கிய பாலங்கள்: தென் கலிஃபோர்னியாவில் புத்தகக் கிளப் - முதல் சந்திப்பு
ஒரே ஆர்வத்தைச் சுற்றி சமூகங்கள் உருவாகின்றன. எங்களுக்காக அந்த ஆர்வம் இலக்கியம். தமிழ் எழுத்தாளர் ஜெய்மோகன் அவர்களின் படைப்புகளை வாசித்து விவாதிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற ஆன்லைன் சமூகத்தில் நான் நீண்ட காலமாக இருக்கிறேன். காலப்போக்கில் வாசகர்கள் அதிகரிக்க, அமெரிக்காவின் பல நகரங்களில் உள்ளூர் புத்தகக் கிளப்புகள் உருவாகத் தொடங்கின. டாலஸ் முதலில் தொடங்கியது—ஐந்து பேர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். சிலர் சான் அன்டோனியோ, ஆஸ்டின் போன்ற இடங்களில் இருந்து பல மணி நேரம் ஓட்டி வந்து கலந்துகொள்கிறார்கள். ஒரு வருடத்திற்கும் மேலாக அவர்கள் ஆரோக்கியமாக இந்த முயற்சியைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதனால் ஊக்கமடைந்த பே ஏரியாவின் ஷாரதா, தனது கனவாக இருந்த புத்தகக் கிளப்பை அங்கே தொடங்கினார். அவருடைய கணவர் பிரசாத் உறுதியாக ஆதரவு அளித்தார்; பத்மநாபப்பிள்ளை மாதந்தோறும் படிக்க வேண்டிய கதைகளை பரிந்துரைத்தார். பே ஏரியா குழு விரைவில் வளர்ந்து, ஜெய்மோகன் அவர்களின் வருடாந்திர இலக்கிய முகாமில் குறைந்தது 15 பேர் கலந்து கொள்கிறார்கள். அவர்களது வாட்ஸ்அப் குழுவில் 40 பேர் இருந்தாலும், மாதாந்திர சந்திப்பில் 15–25 பேர் வருகை தருகிறார்கள். சமீபத்தில் ஜெய்மோகன் அமெரிக்கா வந்தபோது, அவரைச் சந்திக்க பே ஏரியாவுக்குச் சென்றேன். அப்போது ஷாரதாவின் வீட்டில் நடந்த முதல் ஆண்டு விழா மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக Boone Campல் தத்துவ விவாதங்களே நடந்ததால், இந்த இலக்கிய கொண்டாட்டம் எனக்கு தேவையாய் இருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன்
அந்த அனுபவம் எனக்குள் ஒரு எண்ணத்தை விதைத்தது: தென் கலிஃபோர்னியாவிலும் இதுபோன்ற ஒன்றை தொடங்க முடியுமா? ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது—இங்கே மூன்று பேர் மட்டுமே, மேலும் இரு மணி நேர தூரத்தில் வசிக்கிறோம். ஆனால் ஷாரதா உற்சாகப்படுத்தினார்: மாதந்தோறும் முடியாவிட்டாலும், வருடத்தில் சில முறை பே ஏரியாவில் கலந்து கொள்ளலாம். இருந்தாலும், உள்ளூரில் தொடங்கும் எண்ணம் மனதில் இருந்தது. ஜெய்மோகன் USC-யில் புத்தக கையொப்ப நிகழ்ச்சிக்காக வந்தபோது, மீண்டும் அந்த தலைப்பு பேசப்பட்டது. காளிராஜ், அருண் இருவரும் தயாராக இருந்ததால், முயற்சி செய்யலாம் என்று முடிவு செய்தோம். வாட்ஸ்அப் குழு விரைவில் 13 பேராக வளர்ந்தது. அக்டோபர் 24, 2025 அன்று முதல் சந்திப்பு நடத்த முடிவு செய்தோம்.
விதிகள்
ஜெய்மோகன் அவர்கள் வலியுறுத்திய இரண்டு எளிய விதிகளை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்:
மகிழ்ச்சியாக சந்தித்து, மகிழ்ச்சியாக பிரியுங்கள்: கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மரியாதையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். வாதம், தகராறு வேண்டாம்.
நேரக்கட்டுப்பாடு மற்றும் தீவிரம்: கட்டுப்பாடின்றி பேசினால், சந்திப்புகள் சிதைந்து போகும். எனவே, நேரம் மற்றும் கவனம் முக்கியம்.
முதல் சந்திப்பு
எங்கள் அஜெண்டா எளிமையானது:
பாடலுடன் தொடங்குதல் – இசை மனநிலையை அமைக்கும். காளிராஜ் ஒரு பாடலை பாடி அனைவரையும் ஆழமாகக் கவர்ந்தார்.
எழுத்தாளர் அறிமுகம் – ஜெய்மோகன் பற்றிய தனிப்பட்ட அனுபவங்களை அனைவரும் பகிர்ந்தனர்.
கதை விவாதங்கள் – மூன்று சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன:
நூறு நோற்காலிகள் – காளிராஜ் தேர்வு செய்து, 16 நிமிடங்கள் ஆர்வமாகப் பேசினார்.
தேவகிச்சித்தியின் டைரி – தேர்வு என்னுடையது ஆனால் KR அதை பற்றி பேசினார். அனு வினோத் தனிப்பட்ட அனுபவங்களுடன் பகிர்ந்தார்.
விசும்பு – நான் தேர்வு செய்த அறிவியல் புனைகதை.
இரண்டு மணி நேரம் பதினைந்து நிமிடங்களில் சந்திப்பு முடிந்தது. எட்டு பேர் கலந்து கொண்டனர்—ஆண்கள், பெண்கள் சமமாக. எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது!
அடுத்த படிகள்
அடுத்த சந்திப்பு நவம்பர் 23 காலை 10:30க்கு திட்டமிடப்பட்டது. எழுத்தாளர் வாக்கெடுப்பில் முத்துலிங்கம் தேர்வு செய்யப்பட்டார்—எங்கள் வளர்ந்து வரும் வட்டத்திற்கு சரியான தேர்வு.
புக் கிளப் சந்திப்பிற்கு பிறகு நண்பர்கள் வாட்ஸாப்பில் அனுப்பிய குறுந்செய்திகள் இங்கே
Raj - It was a good start and hope to see this continues.
Gowri - Thank you so much for initiating the meet Sriram. It was so wonderful to meet everyone and learn about individual’s reading journey. It was very refreshing to hear the different point of view and it turned out to be a great learning session as well.
Here is the youtube link for the movie trailer "Sivaranjanium sila pengalum", its a anthology one and has three short stores. 2nd one starting from "0:54" is Devaki chithiyin diary. I could not find the full movie, it will be in Netflix or amazon i guess.
https://youtu.be/wRQOiHGqZco?si=nLAoSyOrlWvL3BJ8
KR - While reading “நூறு நாற்லிகள்” - This shorts surfaced https://youtube.com/shorts/oQ_QlZ1-9os?si=sGinZ896znn9HtlN
Kaliraj - நான் வாசிக்க ஆரம்பித்த பொழுதில் இருந்தே எனக்கு வாசிப்பு ஒரு ரகசிய செயல்பாடாகவே இருந்து வந்துள்ளது. அரிதிலும் அரிதாகவே ஒரு சில வாசிப்பாளர்களை சந்தித்திருக்கிறேன். சந்தித்த அந்த சிலரும், கர்நாடகவை சேர்ந்தவர்கள். வாசிப்பாளர்கள் என்றால் பைரப்பா அனந்தமூர்த்தியின் பெயர் தெரிந்தவர்கள். எனது வேலை பார்க்கும் துறையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
ஆகவே இது போன்ற நிகழ்வு என் வாழ்வில் முதல்முறை மட்டுமல்ல நீண்ட காலமாக ஏங்கி தவித்த சூழலும் தான்.
நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இருந்தாலும் தொகுத்து கொள்வதற்காக சில குறிப்புகள்.
ஏன் ஒரு இலக்கிய வாசிப்பாளருக்கு இது போன்ற கூடுகைகள் முக்கியம்?
முதலில் வாசிப்பின் போதாமைகள். இலக்கியத்தில் தவறான வாசிப்பு என்று இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் போதாமைகள் தவிர்க்க முடியாதது. எந்த ஒரு படைப்பையும் நாம் நம் வாழ்வின் அனுபவங்களை கொண்டே வாசிக்கிறோம். எவ்வளவு அனுபவங்கள் இருந்தாலும் இது ஒரு போதாமையே. இத்தகைய கூடுகைகள் ஒரே கதையை வெவ்வேறு நபர்களின் அனுபவங்கள் ஊடாக புரிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. இதுவே முதற்பயன்.
இரண்டாவது பயனாக நான் கருதுவது “சொல்லும்தோறும் வளரும் கதை”. ஒரு கதையைபற்றி நாம் வாய் விட்டு அடுத்தவர்களுக்கு சொல்லும்போது அந்த கதை வளர்ந்திருப்பதை கதை பற்றி சொல்லும் யாவரும் உணர்ந்திருப்பர். எழுதுவதை போலவே கதையை பற்றி நாம் பேசும்போதும் நம் சிந்தனை தொகுக்கபடுகிறது என்பதே இதற்கு காரணம். தொகுக்கும்போது அந்த கதை நம்முள் வளர்ந்திருப்பதை காணலாம். மிக சிறிய பாட்டி வடை சுட்ட கதை உலகில் பெரும்பாலான மரபில் வெவ்வேறு வடிவங்களில் இருப்பதை காணலாம். சொல்பவரை சார்ந்தும் கேட்பவரை சார்ந்தும் கதைகள் வளரும் தன்மை கொண்டவை. ஆக சொல்வதின் மூலமாகவே அந்த கதை வேறு ஒரு பரிணாமம் கொள்வதற்கான எல்லா சாத்தியங்களும் கொண்டது. இவ்வகை கூடுகைகள் ஒரு கூட்டு பண்ணை போல கதைகளின் வெவ்வேறு சாத்தியங்களை வளர்த்தெடுக்கும் வாய்ப்பை அளிக்கிறது. இது இரண்டாவது பயன்.
மூன்றாவது “பகிர்தலின் இன்பம்”. முக்கியமாக, இணையான, ஓத்த அலைவரிசை உடைய நண்பர்களிடம் நம் எண்ணங்களை பகிர்வதில் ஒரு ஆழ்ந்த மகிழ்ச்சி உள்ளது. தாம் அடைந்ததை, உணர்ந்ததை சக உயிருக்கு கடத்த விரும்பாத உயிரே இல்லை. மொழியின் கண்டுபிடிப்பே இந்த பகிர்தலுக்காகவே. ஒருமுறை பகிர்ந்து பாருங்கள். இதன் பொருள் விளங்கும்.
கூடுகைகளின் விதிகள் இந்த அனைத்து பயன்களும் நம்மை அடைய உதவுவதற்காக உருவாக்கப்பட்டவையே. பெரும்பாலும் ஜெயமோகனின் விதிகள். அவை பலவருட எண்ணற்ற கூடுகைகள் நடத்தியதின் வழியாக திரண்டு வந்தது. ஸ்ரீராம் அனைத்து விதிகளையும் குறைந்தது இரண்டு முறை அழுத்தமாக குறிப்பிட்டு இருந்தார். பெரும்பாலும் நாம் அவற்றை கடைபிடித்தோம். இரண்டு விதிகளில் மட்டும் நாம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்யலாம். ஒன்று எனக்கே எனக்கானது. முழுக்கதையையும் கூற வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக ஏழு நிமிட விதி. என்னை தவிர யாரும் அந்த விதியை மீறவில்லை. நான் கதையால் இழுத்து செல்லப்பட்டேன். அடுத்த கூடுகைகளில் இதை நான் தவிர்க்க வேண்டும். மற்றொன்று கிட்டத்தட்ட நாம் அனைவரும் செய்த ஒன்று. வழக்கம் போல் நானே இதில் மோசமாக இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். எண்ணங்கள் சிறகடித்து கொப்பளிக்க கொப்பளிக்க அதை சொல்ல முயற்சி செய்து கொண்டே இருந்தது. ஸ்ரீராம் சொன்னது போல நாம் நம் தருணத்திற்கு காத்திருந்து சொல்வதே நல்லது. மேலும் கருத்து இருந்தால் இரண்டாம் சுற்றில் அதை தெரிவிக்கலாம். இதன் மூலம் நம் அனைவரின் கருத்துக்களையும் முழுமையாக கேட்டு உணர முடியும். பெரும்பாலும் நம் அனைவருக்கும் இது முதல் கூடுகை. ஆகவே அடுத்த அடுத்த கூடுகைகளில் இதை சிறப்பாக்குவோம் என்றே நினைக்கிறேன். முதல் கூடுகைக்கு நாம் நிகழ்த்தியது பெரும் பாய்ச்சல். நாம் இதை தொடர்ந்து செய்தால் மேலும் சிறந்த இலக்கிய வாசகர்களாக நாம் அனைவரும் மாறும் நாள் தொலைவில் இல்லை. Amazing session to start with!
Raj - மிகத்தெளிவாக சொல்லியுள்ளீர்கள் காளி. படித்த பாடத்தை மற்றவர்களுக்குப் படிப்பிக்கும் போது, நான் புரிந்து கொண்டது ஏராளம். அதே போன்றதுதான் கதைகளைப் பத்திக் கதைப்பதிலும் உள்ளது.
நான் எனது மச்சானுடன் கதைத்த காலங்களில், அவ்வாறே நாம் இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டுள்ளோம். கதைத்த பின் சில கதைகளை மீள்வாசிப்புக் கூட செய்திருக்கிறோம். அது ஒரு இளமைக்காலம். பல்கலைக்கழகம் சென்றபின் எல்லாம் மாறிவிட்டது. அதன்பின், இப்போதுதான் மீண்டும் உங்களுடன் அளவளாவ முடிந்தது.
நல்ல ஒரு தொடக்கம். அவ்வாறே தொடர்ந்து செய்வோம்.
நீங்கள் சொல்லியது போல், நாம் கேட்கப் பழகவேண்டும். மற்றவர்கள் சொல்வதை இடையூறின்றிக் கேட்பது ஒரு வரம். அதுவும் இப்போதைய காலகட்டத்தில், எல்லாவற்றிற்கும் ஒரு எதிர்வினை. நாமும் அதற்குப் பழகிவிட்டோம். மாற்றிக் கொள்ளுவோம். இந்தக் கூடுகை, அதனை ஊக்குவிக்கும் என்று நினைக்கிறேன்.
Kaliraj - சன்னதம்!
கடந்த நிகழ்வில் நான் உணர்ந்த மற்றொன்று உள்ளது. கதை சொல்லலில் அமைந்த சன்னதம்.
எங்கள் ஊரில் சன்னதம்கொள்வது என்பது நீர் அருந்துவது போல. வீட்டுக்கு வீடு உண்டு. கொடுத்த கடனை கேட்டவனை கருப்பனின் பெயர் சொல்லி அல்லையில் மிதிப்பதும் ஒரு வகை சன்னதமே. நான் சொல்ல வந்தது அதை போன்றது அல்ல. வேறு ஒரு வகை. ஒரு சிலரிடமே நான் பார்த்தது. ஆழ்மனதின் சன்னதம். மேல் மனம் மயங்கி கரைந்து ஆழ் மனம் மட்டுமே இயங்கும் சன்னதம். அது கருப்பனோ அம்மனோ. மூதாதையின் கருணையை தொட்டு மீளும் சன்னதம். உடல் மண்ணை தொட்டிருக்கும்.!விழி எதிலோ நிலைத்திருக்கும் ! நாவு மட்டும் மொழியில் முயங்கி வரம் வழங்கும் சன்னதம். அந்த சன்னதம் சரணாகதியின் ஒரு பகுதி என்றே நான் நினைக்கிறேன். தன்னை, தன்னை விட உயர்ந்த ஒன்றுக்கு ஒப்புவிக்கும் தன்மை.
நூறு நாற்காலிகள் கதையை நான் சொல்ல ஆரம்பித்த போது முதல் நான்கு வரிகளாக கதையின் அமைப்பு (நேர் கோடற்ற தன்மை) , யாரை பற்றிய கதை என்று கூறும்போது நான் உணர்வுடனே இருந்தேன். ஏனென்றால் அது பலமுறை நான் சொல்லி பார்த்து கொண்டது. ஆம்! மேல் மனமேதான். ஆனால் அதற்கு பிறகு கண் திறந்திருந்தது. அனைத்தையும் பார்த்து கொண்டும் இருந்தது, ஆனால் ஒரு காட்சியும் என் நினைவில் இல்லை. என் நாவு கதை சொல்லிகொண்டே இருந்தது-நேரடியாக - மேல்மனதின் தலையீடு இல்லாமல். எவ்வளவு யோசித்தாலும் ஒரு முகம் கூட அதன் ஒரு உணர்வு கூட நினைவில் எழுந்து வரவே இல்லை. கடைசி வரியான நூறு நாற்காலிகள் வேண்டும் என்று சொல்லி முடிக்கும்போதுதான் நான் மீண்டேன். ஸ்ரீராமிடம் ஏழு நிமிடத்தில் முடித்து விட்டேனா? என்று கேட்டுகொண்டு இருந்தேன். இருமடங்குக்கும் மேல் நேரம் எடுத்து கொண்டிருந்தேன். நாவு உலர்ந்து இருந்தது. இன்றும் கூட ஒருவரின் முக உணர்வுகளையும் நினைவு கூறவே முடியவில்லை. அந்த கதையை முதன் முதலில் படித்தபோது வார்த்தையில்லாமல் கண்ணீருடன் இருந்த தருணத்தை இப்போது நினைத்து கொண்டேன். இலக்கியம் என்பதே ஒரு ஆழுள்ளம் மற்றொரு ஆழுள்ளதோடு கொள்ளும் தொடர்பு என்று ஆசான் அடிக்கடி சொல்வதையும் நினைவு கூர்ந்தேன். அந்த கதை என்னையும் என் மேல்மனதையும் கடந்து ஆழ் உள்ளத்தோடு கொண்ட தொடர்பை மெய்சிலிற்போடு எண்ணி கொண்டேன். அதற்கு என்னை ஒப்பு கொடுத்ததை தவிர நான் ஒன்றும் செய்யவில்லை என்பது எனக்கு தெரியும். ஆம்! தன்னை விட உயர்ந்த ஒன்றுக்கு தன்னை கொடுத்த நிலை. சன்னதமே தான்!
Raj - அப்பிடியான மனநிலையிலா இருந்தீர்கள். அதை உணரவேயில்லை.
அந்தக் கதையைப் பற்றிக் கதைக்கும் போது எனக்கும் கண்ணில் சிறிதாக நீர் வந்து விட்டது. ஆழ ஊடுருவும் கதைதான்
Comments
Post a Comment