’சானெட் ரானெம்’ - உன்னுடைய வலியை நான் எடுத்துக்கொள்கிறேன்

எத்தனையோவித நிலங்கள்,
எத்தனையோவித  நீர்நிலைகள்,
எத்தனையோவித காலநிலைகள்,
எத்தனை பூக்கள், எத்தனை காய்கள்,
எத்தனை விதமான உயிர்கள்,
எத்தனையோவித உணவுகள், உடைகள்,
எத்தனையோவித கலைகள், கலாச்சாரங்கள்
அத்தனையும் அனைவருக்குமானவை.

வேறுபாடு என்பது வெறுப்பை விதைக்க அல்ல, அணைத்து அரவணைத்து, அள்ளிப்பருக.

ஒவ்வொரு நாளும் இயற்கை நமக்கு உணர்த்துவது, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது.

ஆஸ்திரேலிய ஊழித்தீயின் போது,
சென்னை வெள்ளத்தின் போது,
பல நூற்றாண்டு கால பட்டினி சாவுகளின் போது,
கொரோனாவின் போது,

நம்மால் என்ன செய்ய முடிந்தது, ஓடி ஒளிவது அன்றி!

எவ்வளவு அவமானம்! எவ்வளவு வேதனை!!

பல்லாயிரம் ஆண்டு கால பரிணாம வளர்ச்சியின் பின்னும்,
வேற்று கிரகத்திற்கு சக மனிதனை அனுப்பும் அளவு அறிவியல் வளர்ந்த பின்னும்,

நம்மால் இப்பேரழிவுகளை தடுக்கவோ,
தாண்டவோ முடியாத போது,

எங்கிருந்து வருகிறது எரிச்சல்?
எங்கிருந்து வருகிறது இந்த குரோதம்?
எங்கிருந்து முளைக்கிறது இந்த விரோதம்?

எப்படி யானை என்ற பேருயிர்க்கு ஒரு சக மனிதனால் வெடிமருந்து வைத்த உணவை கொடுக்க முடிகிறது!

ஒரு சில மனிதர்களால் ஆதரவற்ற எளிய மனிதர்களை அடித்தே கொல்ல முடிகிறது!

சக மனிதர்களின் பரிதவிப்பான பார்வைகளின் முன்னிலையில்,
ஒரு நாதியற்ற மனிதனின், "என்னால் சுவாசிக்க முடியவில்லை" என்ற கெஞ்சலை உதறி தள்ளி, வெறும் காலால் கடைசி சொட்டு சுவாசத்தை எவ்வாறு நிறுத்த முடிகிறது?

ஒவ்வொரு எளிய மனிதனின் கள்ள மௌனமே அதற்கான காரணம். அதுவே துணிந்தவனுக்கு வலு சேர்க்கிறது, எதனையும் செய்ய தூண்டுகிறது.

எது நீ?
படித்த படிப்பா?
சேர்த்த செல்வங்களா?
பெற்றெடுத்த பிள்ளைகளா?
உன்னால் தேர்ந்தெடுக்க முடியாத, உன் தாயா? தந்தையா?
உன் பிறப்பா?
உன் அகங்காரமா?
நீ செய்யும் பாவங்களா?
ஏன் இந்த கீழ்மை?

உன்னோடு உண்டு, உறங்கி, விளையாடி, உழைத்து, சிரித்த பல ஆயிரம் மனிதர்கள் ஒட்டு மொத்தமாக அத்தனையும் பிடிங்கி எறியப்பட்டு, வெறும் நடை பிணங்களாய் ஆதரவான இடம் தேடி, மிரண்டு, ஊர்ந்து செல்கையில், எப்படி உன்னால் அடுத்த வேளை உணவில் கை வைக்க முடிகிறது? எப்படி அரசாங்கங்களை குறை சொல்ல முடிகிறது?

அதே நிலைமை நம் யாருக்கும் வராது என்று எது உன்னை நம்பவைக்கிறது?

ஒரு சிறு பொறி,
ஒரு தேர்ந்தெடுக்க பட்ட சதி,

- உன்னையோ, என்னையோ, நீ வணங்கும், கண்டு மிரளும் எவரையோ, மிக சாதாரணமாக வீதிக்கு இழுத்து விடும், அஞ்சி ஓட விடும்.

இத்தருணம் என்பது திருப்பி அடிக்க வேண்டியது அல்ல, இழுத்து அனைவரையும் அணைக்க வேண்டியது. நம் ஆதரவென்பது பாதிக்க பட்டவர்களுக்கு மட்டும் அன்றி எவ்வித தெளிவுகளும் இன்றி பாதிப்பை ஏற்படுத்தும் எளிய உயிர்களுக்கும் சேர்த்தே.

எதனாலோ அஞ்சி நடுங்கும்,
ஒண்டி ஒடுங்கும் சக மனிதனுக்கும்,
சக உயிர்க்கும்,
நான் இருக்கிறேன் என்று சொல்லவேண்டிய தருணம்.

ஒன்றுமே செய்ய இயலாத,
அதிகாரமற்ற,
உன்னை போல் ஒருவனாக நான் இருப்பினும்,
உன் ஒழுகும் உதிரத்தை தடுக்க முடியாவிட்டாலும்,
உணர்வால் உன் வலியை தாங்கி என்றும் உன்னுடன் இருப்பேன் என்று கத்தி உரைக்க வேண்டிய தருணம்.

இத்தருணம் உயிர்களின் பால், உணர்வுகளின் பால் நாம் கொள்ளவேண்டியது கட்டுப்பாடுகளற்ற அன்பு.

எதன் மீதும் பெருகிப் பொழியும் மழை போன்று,
காட்டாறு அதன் திசையை தீர்மானிக்காமல் பயணிக்குமே - அது போன்று,
அத்தனை வித்துக்களையும் விளைய செய்யும் தாய் போன்ற - இப்புவி போன்று.

மனிதம் மலரட்டும், நமக்கான விடியல் பிறக்கட்டும்.

’சானெட் ரானெம்’ - உன்னுடைய வலியை நான் எடுத்துக்கொள்கிறேன்.

*’சானெட் ரானெம்’ - . ஆர்மீனிய மொழியில் அதன் பொருள் ’உன்னுடைய வலியை நான் எடுத்துக்கொள்கிறேன்.’
*இத்தலைப்பு அ. முத்துலிங்கம் அவர்களின் ஊபர் கட்டுரையில் இருந்து தூண்டுதலை பெற்றது.

Comments

  1. Very clear expression of thoughts, beautifully written! Thanks for sharing.

    ReplyDelete
  2. ஸ்ரீராம் மிக அருமை நன்றிகள் பலப்பல நெஞ்சை நெகிழ வைக்கும் கருத்துக்கள் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு ஒளியூட்டும் எழுத்துக்கள் நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்

கூடுதல் என்பது களிப்பு Boone Literary Camp