இலக்கியமும் நானும்

சிறு வயதில் இருந்தே எனக்கு புத்தகங்கள் படிப்பது பிடித்தமான ஒன்று. என் தாயார் புத்தகங்கள் படிப்பதினால் அவரிடம் நல்ல பெயரெடுக்கவோ, அல்லது என்னை சுற்றி நடக்கும் எதிலும் விருப்பமில்லாமலோ, அல்லது எதனாலோ எனக்கு புத்தகம் படிப்பது வழக்கமாகி போனது. எப்போதும் ஒரு கனவுலகத்திலேயே வாழ்வதென்பது சுகமானது. 

என் தாயார் புத்தகம் படித்தாலும் வேறு ஒருவரும் எங்கள் வீட்டில் புத்தகம் படிப்பது கிடையாது. புத்தகம் (பாட புத்தகம் தவிர) படிப்பது என்பது ஒரு கெட்ட பழக்கமாக பாவிக்கப்பட்டது எங்கள் இல்லத்தில். 

புத்தகம் படிக்காத நேரங்களில் நான் செய்யும் சேட்டைகளினால் (மாமரம் ஏறுவது, கிணத்தில் தொங்குவது, தெருவில் சண்டை செய்வது, மாடிக்கு மாடி தாவுவது) என் புத்தகம் படிக்கும் வழக்கம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள பட்டது என்று நினைக்கிறேன். தினமலர், தினத்தந்தி, வாரமலர், சிறுவர் மலர், மங்கையர் மலர், கல்கி போன்றவை மூன்றாம் வகுப்பு வரை என் பொழுதுகளை போக்கிக்கொண்டிருந்தன.  என்னை சமாளிக்க முடியாமல் என்னை திருவையாறில் இருக்கும் அம்மா வழி பாட்டியிடம் (அவர் நடுநிலை பள்ளி ஒன்றில் கணித ஆசிரியர், கண்டிப்புக்கு பெயர் போனவர்) அனுப்பப்பட்டேன். 




அங்கு எனக்கு மாலை ஒரு மணிநேரம் மட்டுமே விளையாட அனுமதி. மற்ற நேரங்களில் பாட புத்தகம் படிக்க வேண்டும் அல்லது வாசலில் படியில் உட்கார்ந்து இருபக்கமும் வேடிக்கை பார்க்கவேண்டும். அப்போதுதான் எதிர் வீட்டில் இருக்கும் அக்காக்கள் எனக்கு புத்தகங்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள். என் அம்மம்மாவுடன் பணிபுரிந்த ஆசிரியையின் பெண், என்னில் பத்து பதினைந்து வயது மூத்தவர் என் மேல் ஆச்சரியமும் பரிதாபமும் கொண்டு, என்னை வீடு வீடாக அழைத்து சென்று புத்தகங்கள் இரவல் வாங்கி கொடுத்தார்கள். எனக்கு நான் எந்தமாதிரியான புத்தகங்கள் அப்போது படித்தேன் என்று ஞாபகமே இல்லை. எதோ கிடைத்ததை படித்துக்கொண்டிருந்தேன். இலக்கில்லாமல் பொழுது போக்கிற்க்காக படித்துக்கொண்டிருந்தேன். 

எனது ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை, நான் தபோவனம் என்ற தொண்டு நிறுவனத்தில் படிக்கும் பொழுது, சுவாமி பரானந்த அவர்களால் ஒவ்வொரு சனிக்கிழமையும் திறக்கப்படும் நூலகத்தில் இருந்து அணைத்து விதமான சிறுவர்கள் படிக்க கூடிய (அம்புகள் மாமா, பூந்தளிர், சிறுவர்மலர், கோகுலம்) கதைகளையும் படிக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில், நான் அந்த புத்தக நூலகத்தில் அவருக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன் அப்போதுதான் புதிய புத்தகங்களை உடனே படிக்க முடியும். அப்போதே நான் அவர் வைத்திருந்த பதினைந்து வருட புத்தகங்களை படித்து விட்டிருந்தேன். என் புத்தக ஆர்வம் அந்தப்பள்ளியில் இருந்த அனைவருக்கும் தெரிந்து இருந்தது. 

தாளாளர் நித்தியானந்தா அவர்களால் எனக்கு சிறப்பு சலுகையாக பெரிய புத்தகங்கள் (பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், முல்லா கதைகள்) தருவித்து வழங்கப்பட்டன. ஸ்வாமி சித்பவானந்தர் எழுதிய கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் போன்ற புத்தகங்கள் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாலும், அவை எனக்கு வழங்க படவில்லை, நானும் அந்த புத்தகங்கள் வேண்டும் என்று சண்டை போடவில்லை. 

அதற்க்கு முன்பே இராமாயணம், மஹாபாரதம் படித்து விட்டிருந்தேன், ஆடுதுறையில் வசிக்கும் என் அத்தை ஒருவர் வீட்டில். என் தாய் படிப்பதால் எனக்கு பெண் எழுத்தாளர்கள் அறிமுகம், அதனால் ரமணி சந்திரன், வாஸந்தி, சிவசங்கரி போன்றவர்கள் படித்திருக்கிறேன். எனது 11 / 12 வகுப்பில்  ரோட்டோர  பழைய புத்தக கடைகளில் கிடைக்கும் சுபா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோர் எழுதிய துப்பறியும் கதைகளை பித்து நிலையில் படித்திருக்கிறேன் (ஒரு நாளில் இரண்டு புத்தகம் என்று). எனது கல்லூரி காலத்தில் சக மாணவர்களுடன் சேர்ந்து பாலகுமாரன் கிளப் ஒன்று நடத்தி இருக்கிறேன். எங்களை அவர் ஒருவருக்கு மட்டும் ஒப்பு கொடுத்து. எனக்கு இன்றும் பாலகுமார் கிளப் நண்பர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். இப்போதும் நாங்கள் எப்படி பாலகுமாரன் எங்களை நல்வழி படுத்தினார் என்று பேசிக்கொள்வோம். அதில் உண்மை இல்லாமல் இல்லை. 

வேலை கிடைக்காமல் தேடிக்கொண்டிருந்த காலத்தில், திநகர் நூலகத்தில் இருந்து சாண்டில்யன், கல்கி, சுஜாதா புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். சாருநிவேதிதா எனக்கு tcs நண்பன் ஓபுலிராஜ் மூலம் அறிமுகம். சாரு மூலம் எனக்கு எஸ் ரா, மனுஷ்ய புத்திரன், மௌனி, வண்ணதாசன் அறிமுகம். சாரு எப்போதும் ஜெயமோகனை திட்டி எழுதுவதால், அது யாராக இருக்கும் என்ற ஆவலில் ஜெயமோகன் தளத்திற்கு ஒருமுறை சென்றேன், இன்றுவரை என்னை முழுமையாக கட்டி வைத்திருக்கிறது ஜெயமோகன்.இன் தளம். 

என்னால் புத்தகங்கள் வாங்க முடிந்த வயதில் ஜெயகாந்தனின், கல்கியின், சாண்டில்யனின் அத்தனைபுத்தகங்களையும் வாங்கி குவித்திருக்கிறேன். இதில் ஜெயகாந்தன் எனது தெரிவு, சாண்டில்யன் எனது தாயின் தெரிவு, கல்கி எங்கள் இருவரின் தெரிவு. 

எனது தொடர் வாசிப்பில் பல எழுத்தாளர்கள் எனக்கு திகட்டியும், போதாமையும் ஆகி போனார்கள். என்னை இன்றளவும் வாசிக்க வைப்பது கல்கி, சுஜாதா மற்றும் ஜெயமோகன். நான் ஜெயகாந்தனின் அனைத்து புத்தகங்களையும் வாசித்து விட்டேன் அதனால் அவரை இங்கு குறிப்பிடவில்லை. 

ஜெயமோகனின் தளத்தில் வரும் அனைத்து கட்டுரைகளையும் படிக்கும் போதிலும், எனக்கு மிக பிடித்தது அவரது சிறுகதைகள், பயண கட்டுரைகள், இலக்கிய கூடுகைகள். எனக்கு ஏதாவது ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும். அதனால் தினமும் ஜெவின் தளத்திற்கு தினமும் சென்று படிக்கும் வழக்கம் இருந்தது. மேலும் நான் மற்ற தளங்களையும் அநேகம் தினமும் படிப்பேன். அ முத்துலிங்கம், skp கருணா, பவா செல்லத்துரை, சாரு நிவேதிதா போன்றவர்களின் தளங்கள் நான் தினமும் படிக்கும் சில. 

அறம் சிறுகதைகள் தான் என்னை அடித்து துவைத்த முதல் புத்தகம். எனது வாழ்க்கை அறம் சிறுகதைகள் படிப்பதற்கு முன் மற்றும் பின் என்று பிரிக்கும் அளவுக்கு எனக்கு அறம் மிக முக்கியமான படைப்பு. அதிலும் சோற்றுக்கணக்கு என்னை முற்றிலும் மாற்றிய ஒன்று. 

அறம் மூலம் பெற்ற உத்வேகத்தில், நண்பர்களுடன் இணைந்து அறம் கம்யூனிட்டி என்ற பெயரில் கல்வி செலவுக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன். இது முழுக்க முழுக்க மற்றவர்களின் உதவி பெற்று தேவையான மாணவர்களுக்கு பணம் கட்டுவது. 

அதே நேரத்தில் நான் படித்து கலிபோர்னியா மாகாணத்தின் நோட்டரி பப்ளிக் ஆகிவிட்டிருந்தேன். எனது ஒரு கையெழுத்து 15 டாலர் மதிப்பானது. ஆனால் சோற்றுக்கணக்கின் பாதிப்பால் கையெழுத்துக்கு காசு வாங்குவதில்லை என்று முடிவு செய்து இதுவரை 400 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கையெழுத்திட்டுருக்கிறேன். அவர்கள் ஒருவரும் 15 டாலர் கொடுக்க முடியாதவர்கள் அல்ல. அதில் பெரும் கம்பெனிகளுக்கு உரிமையாளர்கள், பெரும் பதவியில் இருப்பவர்கள் உண்டு. பணம் கொடுக்க வேண்டாம் என்றதும் அதில் பலரும் பதட்டமடைவார்கள். நான் ஏன் என்று விளக்கியவுடன், என்னை பணம் வாங்கி எதாவது தகுதியானவர்க்கு உதவி செய்ய சொல்லுவார்கள். ஆனால் நான் பிடிவாதமாக, இது கணக்கில்லாமல் வாழுவதற்கான ஒரு ஆரம்பம் என்று சொல்லுவேன். அவர்களையே எதாவது ஒரு தொண்டு நிறுவனத்திற்கு பணமாகவோ அல்லது எதாவது ஒரு வகையிலோ உதவி செய்ய சொல்லுவேன். முக்கியமாக கணக்கில்லாமல். அதாவது இரண்டு கையெழுத்துக்கு 30 டாலர்கள் அதனால் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு 30 டாலர்கள் செலுத்தாமல், எதாவது ஒன்றை புதிதாக ஆதரவு அளிக்க சொல்வேன். நான் எந்த ஒரு தொண்டு நிறுவனத்தையும் பரிந்துரைக்க மாட்டேன். 

நான் தொடர்ந்து இலக்கிய முகாம்களுக்கு, தத்துவ முகாம்களுக்கு செல்கிறேன் அதனினும் ஏதேனும் இலட்சியவாத செயல்கள் நடக்கும் போது அதில் பங்குபெறவே எனக்கு விருப்பமாயிருக்கிறது. என்னால் இலக்கியத்தில் அதன் இலக்கிய மதிப்புகளுக்காக திளைக்க முடிவதில்லை. நான் இலக்கியத்தை விரும்பி படிக்கும் போதிலும், அறம் சார்ந்த, இலட்சியவாத செயல்களே என்னை ஈர்க்கின்றன. 

சிபி மற்றும் பிற இளைஞர்கள், இளைஞிகள் 400 கிலோ மீட்டர்கள் நடைபயணம் போவது https://munaiassociation.blogspot.com/, ஆரணி சுதாகர் தினமும் 100 பேருக்கு சமைத்து வழங்குவது https://www.jeyamohan.in/210396/ போன்றவை எனக்கு தரும் ஆனந்தம் என்பது அறம் சிறுகதைகள் எனக்கு தந்த ஆனந்தத்தை விட ஒரு படி அதிகம். 

என் ஒவ்வொரு முடிவும் அறம் சார்ந்து இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் எந்த முடிவும் பணம் சார்ந்தோ, உறவு சார்ந்தோ, இதுநாள் வரையிலான கணக்குகளின் அடிப்படையிலோ அல்லது எதிர்கால கணக்கை மனதில் வைத்தோ இருக்க கூடாது. என்னால் எது செய்யப்பட வேண்டுமோ அதை செய்யவேண்டும் என்பதே எனது வாழ்க்கை பாதை. 

Comments

Popular posts from this blog

மறுவரை செய்யப்படவேண்டிய "வெற்றி" என்பதன் பொருள்

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்

கூடுதல் என்பது களிப்பு Boone Literary Camp