கலிபோர்னியா மாகாண அளவில், 400 மீட்டர் ஓட்டத்தில் முதல் பத்து பேரில் ஒருவன் தமிழன்

9 வயசு தமிழ் பையனை, நீங்க குமான்ல பாத்து இருப்பீங்க, பாட்டு கிளாஸ்ல பாத்து இருப்பீங்க, டான்ஸ் கிளாஸ்ல பாத்து இருப்பீங்க, ஆனா ஓட்ட பந்தய மைதானத்துல பாத்து இருக்கீங்களா, மாவட்ட அளவுல முதல்ல வந்து பாத்து இருக்கீங்களா. நம்ம தமிழ் பையன், ஊரளவுல மட்டும் இல்ல, மாவட்ட அளவுல மட்டும் இல்ல, மாநில அளவுல முதல் பத்து இடத்துல வந்து இருக்காங்க.


கார்த்திகேயன் மற்றும் சுஜாதா தம்பதியினர், நம்மை போல் சாதாரண பின்னணி கொண்ட தமிழ் குடும்பம். கவின் அவர்களது முதல் குழந்தை. 2017 மார்ச் மாதம், கவினுக்கு அன்றைய தினம் அவனது 4ம் வகுப்பு PE கிளாஸ், வழக்கம் போல்தான் இருந்தது, PE ஆசிரியர் புதியவராக இருந்த போதிலும். கவினுக்கு தெரியாது, அந்த புதிய ஆசிரியர், அவனின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றப்போகிறார் என்று.

புதிய ஆசிரியர் வந்து சில நாட்களில், அவர் கவினின்  பெற்றோரிடம், கவினை தினமும் பள்ளி முடிந்தபின் ஒரு மணி நேரம் ஓட்டப்பந்தய பயிற்சிக்கு அனுப்புப்பும் படி ஆலோசனை சொன்னார். கார்த்திகேயனுக்கும், சுஜாதாவிற்கும் எந்த ஆட்சேபனையும் இல்லாதலாலும், கவினுக்கு அந்த அழைப்பு பிடித்திருந்ததாலும், கவின் அன்றிலிருந்து தினமும் மாலையில் ஒரு மணிநேரம் ஓட்ட பந்தய பயிற்சிக்கு போக ஆரம்பித்தான். அப்பொழுது அவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதே மாத இறுதியில், Tustin youth track meetல் கவின் 9 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு 3ம் இடத்தை பிடிக்கிறான், அவன் அந்த 400 மீட்டர் கடக்க எடுத்து கொண்ட நேரம் 80 நொடிகள்.

அதே ஒட்டப்பந்தத்தில் 12 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் முதலிடம் பிடித்த சிறுமியின் தந்தை Gaitlyn கண்ணில் படுகிறான் கவின். அது ஒரு சாதாரண சந்திப்பு. Gaitlyn, கவினிடம் சில மணித்துளிகள் பேசுகிறார், அவருக்கு கவின் இரு வாரங்களுக்கு முன் தான் ஓட ஆரம்பித்து இருக்கிறான் என்பது வியப்பாக இருக்கிறது. அவர் ஒரு தொழில் முறை ஓட்ட பந்தய பயிற்சியாளர். Gaitlyn, கவினால் மென்மேலும் சாதிக்க முடியும் என்றும், அதற்கு அவனுக்கு முறையான பயிற்சி வேண்டும் என்றும் கூறுகிறார், கவினின் 3ம் இடம் தந்த ஆனந்தம், கார்த்திகேயனையும்  சுஜாதாவையும், கவினை முறையான பயிற்சிக்கு Gaitlynனிடம் அனுப்ப சம்மதிக்க வைக்கிறது.

கவின் கொஞ்சம் கொஞ்சமாக 400 மீட்டரை கடக்க எடுத்துக்கொள்ளும் பந்தய நேரத்தை குறைக்க ஆரம்பிக்கிறான். ஏப்ரல் மாதத்தில் ஆரஞ்சு கவுண்டி அளவிலான போட்டியிலும் 3ம் இடத்தை பிடிக்கிறான், மே மாதத்தில் தென் கலிபோர்னியா அளவிலும் 3ம் இடத்தை பிடிக்கிறான். அதற்காக அவன் அதே 400 மீட்டரை கடக்க, ஒவ்வொரு வாரமும் ஒரு வினாடி குறைத்திருக்கிறான். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடம் பிடித்த வீரர்கள் மட்டுமே அடுத்த ஒட்டப்பந்தயத்திற்கு தகுதி பெறுகிறார்கள். ஜூன் 2017 மாத இறுதியில் கவின் அவனது நோக்கமான 70 வினாடிகளில் 400 மீட்டரை அடைந்து விட்டான். கவினின் சாதனைகள் கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களுக்கும், அவனது பெற்றோரின் நண்பர்களுக்கும் தெரிய ஆரம்பிக்கிறது. வாழ்த்துக்கள் குவிய ஆரம்பிக்கிறது.


ஜூலை மாத இறுதியில் சான் டியாகோ ஓட்டப்பந்தய அரங்கிற்குள் நுழைகிறான் கவின். அந்த மைதானம் அவன் பார்த்ததிலேயே மிகவும் பெரியது.  அங்கு வந்திருந்த ஒவ்வொரு ஓட்டப்பந்தய வீரனும், அவனது 4ம் அல்லது 5ம் வயதிலிருந்து பயிற்சி எடுக்க ஆரம்பித்தது மட்டும் அல்லாமல், அவர்களது உணவும் முறையான தொழில் முறை பயிற்சியாளரால் முறைபடுத்த பட்டிருந்தது. ஆனால் கவின் மற்ற தமிழ் பையன்கள் போல் சாதாரண உணவு உட்கொண்டும், வெறும் 3 மாத பயிற்சியுடனும் அந்த மாநில அளவிலான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறான்.

spikes ஷூ கவினிக்கு மிகவும் புதியது, அவன் அந்த ஷூவுடன் போதுமான பயிற்சி பெறவில்லை, மற்றும் முதல் முறையாக ஸ்டார்டிங் ப்ளாக்ஸ் கொடுக்க படுகிறது அந்த பந்தயத்தில். புது இயந்திரங்கள் தந்த அயர்ச்சி மற்றும் பெரிய அரங்கம் தந்த மிரட்சி, கவினின் சுய உச்சமான 70 வினாடியில் 400 மீட்டரை எட்டவிடாமல் செய்துவிடுகிறது. கவின் அந்த 400 மீட்டரை 74 வினாடிகளில் கடக்கிறான். அது அவனுக்கு 10ம் இடத்தை பெற்று கொடுக்கிறது.

அவன் பெற்றது வெறும் பத்தாம் இடம் இல்லை, அது கவின், நம் தமிழ் சமூகத்திற்கு, ஓட்ட பந்தய அரங்கில் பெற்று கொடுத்த முதல் இடம். தமிழர்களாகிய நாம் இன்னமும் வெறும் பார்வையாளர்கள் மட்டும் அல்ல என்று நமக்கே புரிய வைத்த இடம். ஆம் கவின் கார்த்திகேயன் இப்பொழுது நம் தென் கலிபோர்னியா தமிழ் சமூகத்தின் அடையாளம், இது வெறும் ஆரம்பம் தான். இவன் முன்னேறு பிடிக்க, நம் தமிழ் இளவல்கள் வரும் காலங்களில் கலிபோர்னியா ஓட்ட பந்தய மைதானங்களை நிறைத்து, வெற்றி கனிகளை பறிக்க, இவன் சாதனை ஒரு தூண்டுதலாக இருக்கட்டும்.

கவின், நீ ஓட்ட பந்தய அரங்கில் மென்மேலும் வெற்றிகள் பல குவிக்க தாயுள்ளதுடன் வாழ்த்துகிறோம். உனது வெற்றி, உன்னுடையது மற்றும் அல்ல, அது உன் குடும்பத்துடையது மற்றும் அல்ல. அது நம் எல்லோருக்குமானது, நம் தமிழ் சமூகத்திற்க்கானது.

Comments

Popular posts from this blog

மறுவரை செய்யப்படவேண்டிய "வெற்றி" என்பதன் பொருள்

கூடுதல் என்பது களிப்பு Boone Literary Camp

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்