பனுவல் நூலகம் - ஓர் அறிமுகம்

ஏறத்தாழ 6 வருடங்களுக்கு முன், எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதிய தாய்மொழி நாள் கட்டுரை (http://amuttu.net/viewArticle/getArticle/253) இப்படித்தான் ஆரம்பிக்கிறது.  - "சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் (பிப்ரவரி 2010) 85 வயது மூதாட்டி ஒருவர் அந்தமான் தீவில் இறந்துபோனார். அவர் இறந்தபோது அவர் பேசிய மொழியும் இறந்துபோனது. இன்று அதைப் பேச ஒருவரும் இல்லை. அந்த மொழியில் அப்படி என்ன சிறப்பு என்றால் அது 65,000 வருடம் தொன்மையானது. அந்தப் பெண் இறந்தபோது அத்தனை வருடங்கள் வாழ்ந்த மொழி ஒரேயடியாக அழிந்துவிட்டது."

அதே கட்டுரையை அவர் இவ்வாறு முடிக்கிறார் - "அந்தமான் மூதாட்டியின் மொழிக்கு நேர்ந்த கதி தமிழுக்கு ஏற்படக்கூடாது. நாம் தான் அதைச் செய்யவேண்டும். இன்னொரு மொழிக்காரர் வந்து நமக்காக அதை செய்யப்போவதில்லை."

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!!!

முத்துலிங்கத்தின் கட்டுரையால் தூண்டப்பட்டு, ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்த சில நண்பர்கள் இணைந்து தொடங்கியது தான், "பனுவல்" நூலகம். தமிழில் படிக்கவேண்டும் என்று நினைக்கும் எவருக்கும், தமிழ் புத்தகங்கள் கிடைக்க செய்வது தான் இவர்கள் நோக்கம். நம்மில் பெரும்பாலோர், நமது பெற்றோர்களை ஊரிலிருந்து அழைத்து வரும்போது அத்தகைய தேவை இருப்பதை உணர்ந்திருக்க முடியும்.

அமெரிக்க பள்ளிகளிள், குழந்தைகளை தினமும் 20 நிமிடங்கள் ஆங்கிலம் படிக்க அறிவுறுத்துகின்றன. ஒவ்வொரு ஊரிலும், பள்ளிக்கூடத்திலும் போதுமான அளவு புத்தகங்கள் கிடைக்க செய்யப்பட்டுள்ளது. விளைவு, நம் குழந்தைகள் அவர்களது 3ம் அல்லது 4ம் வகுப்பிலேயே தலையணை அளவு புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்கின்றனர். புத்தகம் படிப்பதும் அதை பற்றி பேசுவதும் ஒரு சமுதாய நிகழ்வு இங்கே. ஒவ்வொரு நாளும் நம் குழந்தைகள் பள்ளிக்கூட நூலகத்திலிருந்து ஒரு புதிய நூலை எடுத்து வரும்போது ஏற்படும் மகிழ்வு அதே நேரத்தில்,  அவர்களால்சரளமாக தமிழ்படிக்க முடியவில்லையே என்பது இன்றளவும் கவலையே. மொழியை கற்று கொடுப்பது என்பது முதல் படி என்றாலும், ஏராளமான அளவு புத்தகங்கள் கிடைக்க செய்வதும் இன்றியமையாதது.

அமெரிக்காவில் தமிழ் சொல்லிக்கொடுக்க ஒவ்வொரு பகுதியிலும் தமிழ் பள்ளிகள் தொடங்கப்பட்டு விட்டன ஆனால் இன்றளவும் போதுமான அளவு தமிழ் புத்தகங்கள் கிடைக்க எவரேனும் தமிழ் நூலகம் அமைக்க முற்படவில்லை.இன்றைய இயந்திர வாழ்கையில் எத்தனையோ காரணங்கள். புத்தகம் வாங்க பொருட்செலவு, புத்தகங்களை பராமரிக்க இடம், அதனை முறையாக கொடுத்து, வாங்கி பத்திரப்படுத்த ஆகும் நேரம் என பல...

எதற்கும் ஒரு தொடக்கம் வேண்டும், யாராவது முதல் அடி எடுத்து வைக்கவேண்டும். அப்படி அந்த முதல் அடியை எடுத்து வைக்க துணித்திருக்கும் இந்த பனுவல் நூலக நண்பர் குழுவை, தென் கலிபோர்னியா தமிழ் சங்கம் பெருமையுடன் பார்க்கிறது. இந்த பனுவல் நூலகம், இன்றைய காலத்தில் அத்தியாவசியமாகிறது. பொருள் தேடும் இந்த உலகில், சமூக அக்கறையோடு இவர்கள் எடுக்கும் இந்த முயற்சி பாராட்ட பட வேண்டியது, அரவணைக்கப்பட வேண்டியது.  

பனுவல் நூலக நண்பர்களுடன் நடத்திய நேர்காணல் உங்கள் பார்வைக்கு:

எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன உங்கள் நூலகத்தில்:
ஏறத்தாழ 70 புத்தகங்கள்.

எந்த இடத்தில் இந்த நூலகம் அமைந்துள்ளது?
நூலகத்திற்கு ஒரு நிரந்தர கட்டிடம் கிடையாது, நண்பர்களின் கார் நிறுத்துமிடங்களில் புத்தகங்களை சேமிப்பதாக தான் திட்டம். 70 புத்தகங்கள், 700 புத்தகங்களாக ஆகும் போது தான் நாம் நிரந்தர இடத்தை பற்றி யோசிக்க வேண்டும்.

புத்தகங்கள் வேண்டுவோர் உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
தென் கலிஃபோர்னியாவில் சிறியதும் பெரியதுமாக 6 அல்லது 7 தமிழ் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. மாதம் ஒருமுறை ஒவ்வொரு பள்ளியிலும்  சென்று புத்தகங்களை கொடுத்து வாங்குவதாக திட்டம். இதை தவிர தமிழர்கள் நடத்தும் நடன வகுப்புகள், பாட்டு வகுப்புகள் மூலமாகவும் புத்தகங்களை கொடுத்து வாங்குவதாக திட்டம். அது தவிர, புத்தகம் வேண்டுவோர் இந்த ஈமெயில்லில் தொடர்பு கொண்டு எப்போது வேண்டுமாலும் புத்தகங்களை, வாங்கிக்கொள்ள முடியும்.

எல்லோரும் வலை தளங்களில் படிக்க ஆரம்பித்து விட்டபிறகு நூலகம் நியாயமான தேவைதானா?
ஆங்கில நூல்கள் ஆன்லைனில் கிடைப்பதில்லையா, பிறகு ஏன் ஊருக்கு ஊர், பள்ளிக்கு பள்ளி ஆங்கில நூலகம் தேவைப்படுகிறது? தமிழ் புத்தகங்களுக்கு தேவை இருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம். மேலும் தேவை இருக்கிறதா என்பது சில மாதங்களில் நமக்கு தெரிந்து விடும்.

எப்படி நீங்கள் 70 புத்தகங்களை வாங்கினீர்கள்? மேற்க்கொண்டு புத்தகங்கள் வாங்க திட்டம் இருக்கிறதா? அதற்கு யார் பொருளுதவி செய்வார்கள் ?
சில நண்பர்கள் சேர்ந்து இந்த 50 புத்தகங்களை வாங்கியிருக்கிறோம். சில நண்பர்கள் அவர்களின் பழைய புத்தகங்களை கொடுத்துள்ளார்கள். வருடம் தோறும் புத்தகங்கள் வாங்குவது என்பது பலரின் பழக்கம், அந்த புத்தகங்கள் நமது நூலகத்திற்கு வந்து சேரும் என்று நினைக்கிறோம். புத்தகங்களை வாங்கி படிக்கும் நண்பர்களும் அவர்களிடம் உள்ள பழைய புத்தகங்களை நூலகத்திற்கு கொடுக்கலாம்.

எது மாதிரியான புத்தகங்கள் வாங்கி உள்ளீர்கள்?
பல்வேறு தரப்பட்ட வாசகர்களை மனதில் கொண்டு, வேறுபட்ட ரசனை கொண்ட புத்தகங்கள் வாங்கி இருக்கிறோம். உதாரணத்திற்க்கு பாலகுமாரன் கதைகள், ஜெயகாந்தன் கதைகள், சரித்திர நாவல்கள், சமையல் குறிப்பு, ராஜேஷ் குமார் பாக்கெட் நாவல்கள், குழந்தை வளர்ப்பு, பேலியோ டயட் போன்றவை.

வாசகர்களால் என்ன என்ன புத்தகங்கள் இருக்கின்றன என்பதை முன் கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா?
ஆமாம். பனுவலுக்கு ஆன்லைன் வலைப்பக்கம் தொடங்கப்பட உள்ளது. அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலமாகவே அவர்கள் புத்தகங்களை தேர்ந்து கொள்ள முடியும். அவர்கள் ஈமெயில் மூலமும் கேட்கலாம். புது புத்தகங்கள் வரும்போது, அந்த தகவல் அனைத்து வாசகர்களுக்கும் ஈமெயில் மூலம் தெரியப்படுத்தப்படும்.

புத்தகம் வாங்கிச்சென்றால் எதனை நாளைக்குள் அதனை திருப்பி கொடுக்க வேண்டும்?
எந்த புத்தகமும் இரு வாரங்களுக்குள் திருப்ப வேண்டும், தேவை பட்டால் அடுத்த இரண்டு வாரத்திற்கு அதே புத்தகத்தை வைத்துக்கொள்ள ஈமெயில் மூலம் தெரியப்படுத்தலாம்.

வாசகர்கள் அவர்களுக்கு பிடித்த புத்தகங்களை பரிந்துரை செய்ய முடியுமா?
நிச்சயமாக.

இந்த நூலகம் அமைப்பதை நீங்கள் எதனால் முக்கியமாக கருதினீர்கள்?
ஒரு இனத்தின் அடையாளம் அதன் மொழி. மொழி அழிவடையும் போது அந்த இனம் அழிவடைகிறது. எனவே எந்த மொழியும் தொடர்ந்து வளர்க்க பட வேண்டும். மொழியின் மூலமாகவே, அந்த இனத்தின் பண்பாடு, கலாச்சாரம் பாதுகாக்கப்படுகிறது. மொழி வளர்க்க; அதனை பேச வேண்டும், எழுத வேண்டும், படிக்க வேண்டும். இந்த மூன்று செயல்களும் எல்லோராலும் செய்யப்படவேண்டும். தமிழை எழுத, படிக்க நமது தமிழ் பள்ளிகள் உதவுகின்றன. ஆனால் தொடர்ந்து படிக்க போதுமான புத்தகங்கள் இல்லை. எனவே நூலகம் தேவை என்று எங்களுக்கு படுகிறது. இந்த நேர்காணல் மூலம் அப்படி இதை படிப்பவர்களுக்கும் கருதுவார்கள் என்று நம்புகிறோம்.

உங்கள் நூலகத்தின் வாசகர்களாக நீங்கள் குழந்தைகளை பார்க்கிறீர்களா? தமிழ் கல்வியிலேயே அதற்க்கான நூலகம் இருக்கிறதே?
நாங்கள் பனுவலின் வாசகர்களாக, பெற்றோரையே பார்க்கிறோம். நமது குழந்தைகள், நம்மை பார்த்து வளர்கின்றன. எப்பொழுது பெற்றோர் தமிழ் புத்தகங்களை தொடர்ச்சியாக படிக்கிறார்களோ அப்போது அதை பார்க்கும் குழந்தை, தமிழ் படிக்க ஆசைப்படும். அந்த குழந்தை, தமிழ் கல்வி மையங்களில் உள்ள சிறார் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கும். அதே குழந்தை, அடுத்து என்ன என்று பார்க்கும்போது, பனுவலின் வாசகர்களாக ஆகக்கூடும்.

எனவே நமது உடனடி நோக்கம், படிக்க கூடிய, படித்து கொண்டிருந்த தமிழ் பெற்றோர், புத்தகம் இல்லாமல் படிக்காமல் இருக்காமல், பனுவலின் மூலம் தமிழ் புத்தக வாசிப்பை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே. ஊரிலிருந்து வரும் தாத்தா பாட்டிகளும், பனுவலின் மூலம் நல்ல புத்தகங்களை படித்து பொழுதை கழிக்கலாம்.

புத்தகங்களை எடுத்து வாசிப்பது நன்மையே ஆனால், அந்த புத்தகங்களை பற்றி கலந்துரையாடினால் அது இன்னும் நன்றாக இருக்குமே?
உண்மைதான். குறிப்பிட தகுந்த வாசகர் வட்டம் அமையும் போது, பனுவல் நூலக நண்பர்கள் அவர்களை ஒருங்கிணைத்து புத்தகத்தை பற்றி கலந்துரையாட செய்யலாம். நமது இர்வின் தமிழ் கல்வி மையத்தில் உள்ள திண்ணையை நாம் அதற்க்கு பயன் படுத்தலாம்.

எண்ணிலடங்கா நல்ல விஷயங்கள் இதன் மூலம் நடக்கலாம், நம்மால் அனைத்தையுமே இப்பொழுது பார்க்க முடியாது. காலம் தான் உங்கள் கேள்விக்கு உரிய பதிலை தர முடியும்.

குழந்தையும் இறைவனும் கொண்டாடும் இடத்தில் என்பது மூத்தோர் வாக்கு. மொழியும் கூட அப்படித்தான். உங்களின் இந்த நூலக முயற்சி வெற்றி பெற்று அதன் மூலம் தமிழ், தென் கலிஃபோர்னியாவில் கொண்டாடப்படவேண்டும். அதற்கு தமிழ் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்.

நண்பர்களே, எந்த முயற்சியும் அந்த சமூகம் அதனை ஏற்று கொள்வதாலேயே வெற்றிபெறுகிறது. இது ஒரு நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்க பட்ட முயற்சி. உங்களின் பேராதரவின் மூலம் மேலும் மேலும் புதிய நூலங்கள் ஊர்கள் தோறும் தொடங்க பட வழி செய்யுங்கள்.

உங்கள் குழந்தைகளை, தமிழ் கல்வியில் சேர்ப்பதும் (6 அல்லது 7 தமிழ் கல்வி நிலையங்கள் தென் கலிஃபோர்னியாவில் உள்ளன), உங்கள் குழந்தைகள் பார்க்க நீங்களும், ஊரிலிருந்து வரும் உங்கள் பெற்றோரும் தமிழ் படிப்பதும் உங்கள் கடமை. அ.முத்துலிங்கம் சொல்வது போல அதை நாம் செய்யாமல், யார் செய்யவேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்?

http://panuval.org
contact@panuval.org


Comments

Popular posts from this blog

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்

கூடுதல் என்பது களிப்பு Boone Literary Camp

’சானெட் ரானெம்’ - உன்னுடைய வலியை நான் எடுத்துக்கொள்கிறேன்