சமத்துவ உலகு படைக்கும் கொரோனா எனும் புதிய விதி



கடந்த சில நாட்களாக உங்கள் அனைவராலும் கொரோனா தொற்று மற்றும் அதனின் விளைவுகள் பற்றி,  திகட்ட திகட்ட தகவல் திரட்டப்பட்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால், உங்கள் விருப்பத்திற்கு மாறாக மேலதிக தகவல்கள் உங்கள் காதுகளில், கண்களில் திணிக்கப்பட்டிருக்கும். ஆம் நாம் தகவல் திணிப்பு யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதன் பாதகங்களை பேசிக்கொண்டும், தகவல் திணிப்பில் நம்மை ஒப்புக்கொண்டும், அதே தகவல்களை நாம் பிறர் மேல் திணித்துக்கொண்டும்.

இந்த கட்டுரையில் நான் எந்த வித தகவல்களையும் உபயோகிக்க போவதில்லை. இது முழுக்க முழுக்க என்னால் உணரப்பட்டது, எனக்கு புலப்பட்ட உணர்வை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியே இதனை எழுதுகிறேன்.

மனிதனெனும் சுயநல அரக்கன், இப்புவிக்கும் அதன் பிற உயிர்களுக்கும் செய்த, செய்து கொண்டிருக்கும் இன்னல்களை பொறுக்க மாட்டாமல், இயற்கை அன்னை அளிக்கும் எச்சரிக்கை இந்த கொரோனா என்னும் தொற்று. இதனால் பலருக்கும் பல இன்னல்கள் ஏற்படும் போதிலும், நாம் உணரும் ஓர் உண்மை என்பது, பல விஷயங்கள் நாம் செய்யவேண்டியது இல்லை என்பதே. அத்தியாவசிய பொருட்களுக்கும், வேலைகளுக்கும் எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்காமல், கற்பனையால் வளர்த்தெடுக்கப்பட்ட அனாவசிய தேவைகளால் மனித இனமே ஒருவித பதட்டத்திலும், நிம்மதியின்மையிலும் வாழ்ந்து கொண்டிருக்கவேண்டியுள்ளது.

மனிதனுக்கும், இன்ன பிற உயிர்களுக்கும் தேவை என்பது உண்ண உணவு, சுவாசிக்க காற்று, குடிக்க நீர். இன்றைய நாளில் எத்தனை சதவிகித மக்கள் இந்த அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களது ஆற்றலை செலவு செய்கிறார்கள். எத்தனை சதவிகித மக்கள் இந்த புவியை அதன் அழகை ரசிக்க நேரம் ஒதுக்கி வைக்கிறார்கள்.

கொரோனா தொற்றினால், தங்களை தாங்களே தனிமை படுத்தி வைத்திருக்கும், அறிவார்ந்த அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் என் பார்வையில்:

1. இது நம் அனைவருக்கும் தேவையான ஒரு ஓய்வு. மனிதர்கள் ஒடுங்கி ஒளிந்து கொள்ளும் இந்த சில வாரங்களில் அல்லது மாதங்களில், மற்ற உயிரினங்கள் தங்கள் புவியை முழுமையாக அனுபவிக்க ஒரு வாய்ப்பு. இந்த புவியே சற்று நிம்மதியாக சுவாசிக்க ஒரு இடைவெளி. இயந்திரங்கள், வாகனங்கள் நிறுத்தப்பட்ட இந்த தருணங்கள் நமக்கு நாமே ஏற்படுத்திய மாசுபாடுகளை அடையாளம் காணும், உணர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு.

2. ஊதி பெருக்கப்பட்ட பொருளாதார குமிழி உடைந்து சாதாரண மனிதனும் சம வாய்ப்பு பெறும் உன்னதம் நிகழும் தருணமிது. மனித ஆட்டம் மீண்டும் தொடங்கும் போது, பலதரப்பட்ட மனிதர்களும் கிட்டத்தட்ட சம வாய்ப்பு பெரும் நிகழ்தகவு.

3. பொருட்களை விட சக மனிதர்கள் மேல் கவனம் செலுத்த கொடுக்கப்பட்ட கடைசி தருணமிது

4. மின்சாதன பொருட்கள், முதல் சில நாட்களில் மனிதர்களை அதே பரபரப்பில் வைத்திருந்தாலும், வரும் வாரங்களில் மனிதர்கள் தலை நிமிர்ந்து சக மனிதனை பார்த்தே, பேசியே ஆகவேண்டிய நெருக்கடி. அங்கொன்றும் இங்கொன்றுமாக இயற்கை சீற்றம் காட்டி மனிதனை திருத்த செய்த பேரழிவுகளான பேய் மழை, பெரு வெள்ளம், புவிப்பிளவு, ஊழித்தீ போன்றவை சற்றும் பலனற்று போன பரிதாபத்தால், புவியன்னை எடுத்த அடுத்த ஆயுதம் இந்த கொரோனா. மற்ற பேரழிவுகளில் தப்பி ஓடிய பெரு மனிதர்கள், அறிவுஜீவிகள், பண முதலாளிகள், மானுட உலகை முன்னெடுக்கும் தலைவர்கள் போன்ற அனைவரும் சம அளவில் பாதிப்பை ஏற்றாகவேண்டிய புதிய விதி இந்த கொரோனா.

எனது நம்பிக்கை என்பது, இந்த சில வாரங்கள் அல்லது மாதங்களில், தனிமை படுத்தப்பட்ட மனித மனங்கள், இயற்கையின் அடிப்படை விதிகளை உணர்ந்து கொள்ளும் என்பது. இந்த நெருக்கடி புதிய தலைவர்களை உருவாக்கும் என்பது. புதிய விதிகளை படைக்கும் என்பது. மனிதர்களால் கற்பனையாக ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை களையும் என்பது. ஓர் உன்னதமான, சமத்துவமான உலகம் படைக்கப்படுமென்பது. 

Comments

  1. அற்புதமான பதிவு! நன்றி! வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. உண்மை, நல்ல பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்

கூடுதல் என்பது களிப்பு Boone Literary Camp

’சானெட் ரானெம்’ - உன்னுடைய வலியை நான் எடுத்துக்கொள்கிறேன்