இலக்கியமும் நானும்
சிறு வயதில் இருந்தே எனக்கு புத்தகங்கள் படிப்பது பிடித்தமான ஒன்று. என் தாயார் புத்தகங்கள் படிப்பதினால் அவரிடம் நல்ல பெயரெடுக்கவோ, அல்லது என்னை சுற்றி நடக்கும் எதிலும் விருப்பமில்லாமலோ, அல்லது எதனாலோ எனக்கு புத்தகம் படிப்பது வழக்கமாகி போனது. எப்போதும் ஒரு கனவுலகத்திலேயே வாழ்வதென்பது சுகமானது. என் தாயார் புத்தகம் படித்தாலும் வேறு ஒருவரும் எங்கள் வீட்டில் புத்தகம் படிப்பது கிடையாது. புத்தகம் (பாட புத்தகம் தவிர) படிப்பது என்பது ஒரு கெட்ட பழக்கமாக பாவிக்கப்பட்டது எங்கள் இல்லத்தில். புத்தகம் படிக்காத நேரங்களில் நான் செய்யும் சேட்டைகளினால் (மாமரம் ஏறுவது, கிணத்தில் தொங்குவது, தெருவில் சண்டை செய்வது, மாடிக்கு மாடி தாவுவது) என் புத்தகம் படிக்கும் வழக்கம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள பட்டது என்று நினைக்கிறேன். தினமலர், தினத்தந்தி, வாரமலர், சிறுவர் மலர், மங்கையர் மலர், கல்கி போன்றவை மூன்றாம் வகுப்பு வரை என் பொழுதுகளை போக்கிக்கொண்டிருந்தன. என்னை சமாளிக்க முடியாமல் என்னை திருவையாறில் இருக்கும் அம்மா வழி பாட்டியிடம் (அவர் நடுநிலை பள்ளி ஒன்றில் கணித ஆசிரியர், கண்டிப்புக்கு பெயர்...