ஜெயமோகன் மற்றும் குடும்பத்தின் தென் கலிஃபோர்னியா பயணம் — Living Tamil LitFest‑க்கு பிந்தைய சிறப்பு சந்திப்பு
எழுத்தாளர் ஜெயமோகனும் அவரது மனைவி அருண்மொழி நங்கை, அவர்களது மகள் சைதன்யா மற்றும் மகன் அஜிதன அவர் மனைவி தன்யாவும் April 11, 2026 தென் கலிஃபோர்னியாவுக்கு வந்திருந்தார்கள். அனைவருக்கும் இரவு உணவு சிவப்ரியா தயார் செய்திருந்தாள். அஜிதனும் தன்யாவும் எங்கள் இல்லத்திலேயே தங்கிவிட, மற்றவர்கள் காளிராஜ் வீட்டிற்கு சென்று தங்கினார்கள்.
புத்தக வாசிப்பு சங்க நண்பர்கள் அனைவருக்கும் காளிராஜ் வீட்டில் April 12, 2026 காலை உணவு தயாராக இருந்தது.
காலை உணவிற்கு பிறகு ஜெயமோகன் சார் அனைவரிடமும் சிறிது பேசிக்கொண்டிருந்தார். இன்றைய நாளின் பேசுபொருள் எப்படி செயற்கை நுண்ணறிவு மிகவும் அபாயகரமானது, எப்படி அது பிரச்சனைகளை ஏற்படுத்த முடியும் மனிதனால் சரியாக கையாளப்படாவிட்டால் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அது எப்படி ஒரு இளம் வழக்கறிஞரை அத்தொழிலை விட்டு விலகச்செய்தது என்று சொன்னார். அந்த இளம் வழக்கறிஞர் செயற்கை நுண்ணறிவு கொடுத்த தகவல்களை சரிபார்க்காமல் அப்படியே நீதிபதிக்கு கொடுத்து அவரும் அதனை ஒத்துக்கொண்டு எதிர்தரப்பு அனுப்பி வைத்துவிட்டார். எதிர் தரப்பு வயதான வழக்கறிஞர் அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்ட இந்தியன் பெனல் கோர்ட் ஆதாரங்கள் அத்தனையும் போலியானவை, செயற்கை நுண்ணறிவு கொண்டு உண்மை போலவே சித்தரிக்கப்பட்டு அனுப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியவுடன், நீதிபதி கோபம் கொண்டு அந்த இளம் வழக்கறிஞரை 5 வருடம் நீதிமன்ற நடவடிக்கையிலிருந்து விலக்கி வைத்துவிட்டார்.
பொதுவாக, AI‑ஐ பயன்படுத்தும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தகவலைச் சேகரிக்க அது உதவலாம், ஆனால் அதன் உண்மைத்தன்மையை நாமே சரிபார்க்க வேண்டும்.
AI‑ஐ முழுமையாக நம்ப முடியாது.
சிறப்பாக, AI‑ஐ விளக்கம் அளிக்க (interpret) நம்ப முடியாது.
அது பல நேரங்களில் இல்லாத இடங்களைத் தானாகவே நிரப்பி விடும்.
புத்தக வாசிப்பு சங்கங்களின் அவசியம் மற்றும் கதை படிக்காவிட்டாலும் கதை விவாதத்தில் கலந்து கொள்ளுவதின் தேவை பற்றி சொன்னார். பொதுவாக கதை விவாதத்தில் கலந்துகொளவ்து தான் முக்கியம், கதைகளை படித்துவிட்டு தான் போகவேண்டும் என்பதில்லை என்று சொன்னார்.
வந்திருந்த அனைத்து நண்பர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டு பிறகு இரண்டு டெஸ்லா Y கார்களில் அவர்கள் 5 பேருடன் நானும் காளிராஜும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றோம்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் முக்கியமான சில இடங்களுக்கு அவர்கள் அனைவரையும் அழைத்துச்சென்றோம். இன்று நாங்கள் சென்றுவந்த வழித்தடம் இங்கே.
கிரிஃபித் வானியல் மையத்தைப் பார்வையிட்ட பிறகு, ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் வழியாக நடந்தோம். அதன் பின் டெஸ்லா டைனருக்கு சென்றோம். அங்கே உணவு சாப்பிட்ட அனுபவம் அனைவருக்கும் மிகவும் பிடித்தது—எதிர்காலத்தை நினைவூட்டும் அந்த சூழல், ரோபோட்டுகள், திறந்தவெளி திரையரங்கில் சில நிமிடங்கள் படம் பார்க்கும் அனுபவம்—எல்லாமே புதுமையாக இருந்தது.
அதற்குப் பிறகு, முழுமையாக தானியக்கமாக இயங்கும் Waymo காரில் “The Last Bookstore”‑க்கு பயணம் செய்தோம். அங்கிருந்து லகுனா பீச்சின் அருகே உள்ள Top of the World எனும் இடத்துக்கு சென்று சூரிய அஸ்தமனத்தை ரசித்தோம்.
இரவு உணவிற்காக Kovai Kitchen – Authentic South Indian & Indo‑Chinese Pure Vegetarian Restaurant சென்றோம். நான் கோவை கிச்சன் வணிகத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், இது எனக்கு ஒரு தனி மகிழ்ச்சி. என் நண்பர் ராஜ் கிரிஷ் இந்த உணவகத்தின் உரிமையாளர். என் நண்பர் செந்தில், கோவை கிச்சனின் தலைமை சமையல்காரர் (Chief Chef).
அங்கே ஜெயமோகன் சார் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சந்தித்ததில் கோவை கிச்சன் குழுவினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
“உலகம் எவ்வளவு சிறியது!” — கோவை கிச்சனில் நடந்த அதிசயமான சந்திப்பு
அங்கே நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் எங்களை எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.
கோவை கிச்சனில் வேலை செய்யும் ஒருவரான பிரவீன், ஒரு விளம்பரத் திரைப்படத்திற்காக இசை அமைத்திருந்தார். அந்த விளம்பரத்தில் ஜெயமோகன் சார் நடித்திருந்தார்—அது ஒரு வேஷ்டி விளம்பரம்.
வேஷ்டி விளம்பரம்:
பிரவீன் ஒரு தெலுங்கு நபர். ஆனால் அவர் தமிழ்நாட்டில் கல்லூரியில் படித்த காலத்தில் இந்த விளம்பரத்திற்காக இசை அமைத்திருந்தார். அவர் அந்த விளம்பரத்தை ஜெயமோகன் சாரிடம் காட்டினார்; சார் அதை பார்த்தவுடன் உடனே நினைவுபடுத்திக் கொண்டார்.
ஆனால் அந்த இசையமைப்பாளர் யார் என்பதை ஜெயமோகன் சார் இதுவரை அறியவில்லை. அந்த சந்திப்பு கோவை கிச்சனில்தான் நடந்தது.
அந்த நிமிடத்தில் நாங்கள் அனைவரும் ஒரே வார்த்தை சொன்னோம்— “உலகம் ரொம்பச் சிறியது!”
நீண்ட நாள் பயணத்திற்குப் பிறகு, அனைவரும் சோர்வாக இருந்தாலும் மனம் நிறைந்திருந்தது.

Comments
Post a Comment