இலக்கிய பாலங்கள்: விவாதம் - வைரமுத்துவுக்கு ஞானபீடம்

இது சமயத்தில் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் இலக்கிய உலகில் வையரமுத்து விருது விவகாரம் மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எங்கள் புத்தகக்கூட்டத்தில் நடந்த விவாதங்களும் அதே திசையில் ஆழமான சிந்தனைகளை தூண்டின. கீழே அந்த கருத்துக்களின் தொகுப்பு.

காளிராஜின் கருத்து 

பல எழுத்தாளர்கள்—இடதோ வலதோ—இந்த விருதுக்கு எதிராக இருப்பது சுவாரஸ்யம். வையரமுத்துவின் படைப்புகளை இலக்கியக் கோணத்தில் ஆராய்ந்து, “ஏன் இது இலக்கியம் அல்ல?” என்று தெளிவாக விளக்கும் ஒரு நல்ல ஆய்வு எழுதப்படவேண்டும். அது இன்றும் இல்லை.

அவரின் ஒழுக்கக்குறைப்பு சம்பவங்கள் தனி விஷயம்; ஒரு எழுத்தாளரின் தனிப்பட்ட வாழ்க்கை காரணமாகவே அவரின் படைப்பை நிராகரிக்கக் கூடாது என்பதே என் நிலை. உதாரணமாக—கோனங்கி. அவருக்கு விருது கிடைத்தால் யாரும் எதிர்ப்பதில்லை.

ஆனால் வையரமுத்துவின் படைப்புகள் இலக்கிய மதிப்பில்லாதவை என்பதில் எனக்கு சந்தேகமில்லை. சட்டரீதியாக, சின்மயி கூறியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் படைப்பை மதிப்பிடும்போது அதை தனியாகப் பார்க்க வேண்டும்.

ராஜின் கருத்து

அவரின் விஷயத்தில் “பிரித்துப் பார்க்க” முடியாது என நான் நினைக்கிறேன். அவர் செய்தது மன்னிக்க முடியாதது. அமெரிக்காவில் பல வழக்குகளைப் பார்த்தபின், இது சட்டரீதியைத் தாண்டி தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

அவரின் எழுத்தை வாசிக்கவே மனம் வரவில்லை. ஜெயமோகனுக்கு எவ்வளவு கோபமோ, அதே அளவு எனக்கும் உள்ளது. ஜெயமோகன் ஏற்கனவே அவரது எழுத்தைப் பற்றி தெளிவாக எழுதியிருக்கிறார்; அதைத் தாண்டி நாம் ஆராய வேண்டுமா என்பது சந்தேகம்.

ஸ்ரீராமின் கருத்து

எனக்கு மூன்று விஷயங்களும் கவலை தருகிறது:

  1. இலக்கிய மதிப்பு இல்லாமை

  2. தனிப்பட்ட ஒழுக்கம்

  3. தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் முறைகள்

இந்த மூன்றிலும் அவர் “தமிழ் இலக்கியத்தின் முகம்” ஆக முடியாது என்பதே என் நிலை.

காளிராஜின் தொடர்ச்சி

இப்படிப் பட்ட விவாதங்கள் நம்மிடையே நடக்க வேண்டும். நாம் சாதாரண வாசகர்கள் அல்ல; நம் கருத்துகளுக்கு எடை உண்டு.

எனக்கு எப்போதும் ஒரு குழப்பம்: கலை vs கலைஞன். கண்ணதாசன் (மதுபானம்), கமல்ஹாசன் (அரசியல்/தனிப்பட்ட வாழ்க்கை) — பல உதாரணங்கள்.

இந்த விவகாரத்தில், வையரமுத்துவின் “கலை”யே மதிப்பில்லாதது என்று நாமே முடிவு செய்துவிட்டோம். ஆனால் ஒருவரின் கலை சிறந்தது, ஆனால் அவர் மனிதராக சிறந்தவர் அல்ல என்றால்? அதை எப்படி பிரிப்பது?

ராஜின் பதில்

அதுதான் ஜெயமோகனும் சாருவும் இவ்வளவு கோபமாக இருப்பதற்குக் காரணம். இது “அவரின் தனிப்பட்ட வாழ்க்கை” என்று சொல்ல முடியாத ஒன்று. கமலின் விஷயத்தில் அது தனிப்பட்டது; அவர் யாரையும் காயப்படுத்தவில்லை. ஆனால் வையரமுத்துவின் செயல்கள் வேறு.

காளிராஜின் ஒப்புதல்

சரி. அதேபோல் கண்ணதாசனுக்கும் பொருந்தும். அவர் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பகிர்ந்தவர்; ரகசியம் எதுவும் இல்லை.

சந்திரிகாவின் பார்வை

நான் கலை மற்றும் கலைஞனைப் பிரித்து பார்க்கும் வகையைச் சேர்ந்தவன். ஆனால் இது எழுத்தாளர்கள் வரும்போது சற்று கடினம். ஏனெனில் எழுத்து நேரடியாக வாசகரின் மனதையும் மதிப்புகளையும் பாதிக்கிறது.

கண்ணதாசன், பாலகுமாரன் போன்றவர்கள் தங்கள் வாழ்க்கையை மறைக்கவில்லை; அதனால் அவர்களின் கலை மற்றும் வாழ்க்கையைப் பிரிக்க எளிதாக இருந்தது. கமல் ஒரு நடிகர்; அவரது தனிப்பட்ட வாழ்க்கை அவரது நடிப்பை பாதிக்கவில்லை.

ஆனால் வையரமுத்துவின் பாடல்களில் பெண்களைப் பற்றிய அவரது பார்வை வெளிப்படையாகத் தெரிகிறது—even if he uses fancy words. அதனால் அவரின் கலை மற்றும் அவரின் நெறி ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியவில்லை.

இந்த விவாதம் ஒரு பெரிய கேள்வியை முன்வைக்கிறது: கலை மற்றும் கலைஞன்—எப்பொழுது பிரிக்கலாம்? எப்பொழுது பிரிக்க முடியாது?

வையரமுத்து விவகாரத்தில், எங்கள் குழுவின் ஒருமித்த நிலை:

  • அவரது படைப்புகள் இலக்கிய மதிப்பில் குறைவானவை

  • அவரது செயல்கள் தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதவை

  • அதனால் “பிரித்துப் பார்க்கும்” வாய்ப்பே இல்லை

இந்த விவாதம் தொடர வேண்டும். ஏனெனில் இலக்கியம் என்பது வெறும் சொற்கள் அல்ல—அது மனித மதிப்புகளின் பிரதிபலிப்பு.

Comments

Popular posts from this blog

இலக்கிய பாலங்கள்: சரவணகார்த்திகேயன் (CSK) - 9ம் சந்திப்பு - June 6, 2026

இலக்கிய பாலங்கள்: அ. முத்துலிங்கம் - 2nd சந்திப்பு - Nov 23, 2025

இலக்கிய பாலங்கள்: ஜெயமோகன் - 1st சந்திப்பு - Oct 24, 2025