இலக்கிய பாலங்கள்: சரவணகார்த்திகேயன் (CSK) - 9ம் சந்திப்பு - June 6, 2026

இர்வைன் தமிழ் புக் கிளப்பின் ஒன்பதாவது மீட்டிங் இன்று, ஜூன் 7, 2026. மாலை 5 மணி முதல் 7 மணி வரை, நண்பர்கள் கலந்து கொண்ட ஒரு அமைதியான, ஆனால் உள்ளுக்குள் பெரும் அலைகளை எழுப்பிய இரண்டரை மணி நேரம். 

வாழும் தமிழ் இலக்கிய விழா தந்துவிட்ட பல நல்ல விசயங்களில் இதுவும் ஒன்று. எங்களூர் (இர்வின், தென் கலிபோர்னியா) பொண்ணு, பாரதி காளிராஜ் ஒருங்கிணைத்ததால் எந்தவித குழப்பமும் இன்றி சுந்தரராமசாமி அரங்கிற்கு இரண்டாம் நாள் நடந்த "இந்தியா: உணவும் உணர்வும்" அரங்கிற்கு சென்று அமர்ந்தேன். ஆனால் அங்கே நான் முழுமையாக வாசிக்க வேண்டும் என்று நினைக்கவைத்த இரண்டு முக்கிய எழுத்தாளர்களை கண்டுபிடித்தேன் — லட்சுமி சரவணகுமார் மற்றும் சரவணகார்த்திகேயன்.  


ஜூன் மாத கூடுகைக்கு நாங்கள் எடுத்துக்கொண்ட எழுத்தாளர் CSK என்று அழைக்கப்படும் சரவணகார்த்திகேயன். ஆறு கதைகள், ஆறு வாசிப்பாளர்கள், பலவிதமான உணர்வுகள். அவரது ஆறு கதைகளை வாசித்து விவாதித்த அந்த சில மணி நேரங்கள் எங்களை எவ்வளவு ஆழமாக உள்மனத்துக்குள் இழுத்துச் சென்றன என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. சில வாசிப்புகள் மனதைத் தொடும்; சில வாசிப்புகள் மனதைத் துளைக்கும்; ஆனால் சில வாசிப்புகள்—நுண்ணுணர்வு மிக்க மனிதனாக வாழவேண்டிய அவசியத்தை நினைவூட்டும். 

மீட்டிங் தொடங்க காளிராஜ் “புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்” என்று திருவாசகத்தை மெதுவாகப் பாடியது அறையில் ஒரு அமைதியை உருவாக்கியது. அந்த அமைதியே எங்களை கதைகளுக்குள் அழைத்துச் சென்றது.

முதல் கதை “நான்காம் தோட்டா”. 

காந்தி எத்தனை முறை பேசப்பட்டார், எத்தனை முறை விமர்சிக்கப்பட்டார், எத்தனை முறை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டார், எத்தனை முறை மீண்டும் மீண்டும் விளக்கப்பட்டார். வரலாற்றில் இவ்வளவு முறை விவாதிக்கப்பட்ட மற்றொரு மனிதர் இருக்கிறாரா? எனக்கு காந்தி எப்போதும் ஒரு விளக்கத்தூண். என் வாழ்க்கையில் நான் தடுமாறும் ஒவ்வொரு முறையும், “சரியானதை செய்” என்று சொல்லும் ஒரு அமைதியான குரல். Former first lady Michelle Obama's quote delivered during her speech at the 2016 democratic national convention is "when they go low, we go high". அந்த நெறி உயர்வை காந்திதான் உலகுக்கு கொடுக்கிறார், அந்த ஒபாமா குடும்பத்திற்கும் சேர்த்து.

அடுத்து கௌரி சொன்ன “கருப்பு மாளிகை”. தாஜ்மகாலின் பூரண சமச்சீரில் ஷாஜகானின் கல்லறையை ஒருபக்கம் அவுரங்கசீப் சேர்த்தது ஒரு குறைபாடா? அல்லது காதலின் முழுமையை நிறைவு செய்த ஒரு புனிதமா? எது சரி? எது தவறு? நாம் யார் தீர்ப்பளிக்க? இந்தக் கதை எங்கள் கூட்டத்தில் ஒரு சிந்தனையை விதைத்தது. வரலாறு எப்போதும் ஒரே கோணத்தில் பார்க்கப்படுவதில்லை அல்லது பார்க்கப்படவேண்டியதில்லை.

ஆனால் பிரியா காளி “பெட்டை" கதையைப் பேசத் தொடங்கிய நொடியே அறை முழுவதும் ஒரு கனத்த மௌனம். மாதவி பிரியாணி சாப்பிடும் அந்த ஒரு காட்சி—

எங்கள் தொண்டையில் எல்லாம் ஒரு கசப்பு.

பொதுவாக நாங்கள் ஒரு கதையை ஏழு நிமிடங்களில் சொல்லி, பதினைந்து நிமிடங்களில் விவாதத்தை முடித்து அடுத்த கதைக்குச் சென்று விடுவோம். ஆனால் இந்த முறை நேரம் நின்றுவிட்டது போல இருந்தது. ஒவ்வொருவரும் எதோ பேசினார்கள்; பேசாதவர்களின் கண்களும் பேசின. சிலரின் குரல் நடுங்கியது, சிலரின் கண்ணீர் தடுக்க முடியாமல் வழிந்தது. அமைதியான கொந்தளிப்பு, சொல்லாத வலி—அவை அனைத்தும் அறையில் பரவியிருந்தன.

அந்த வீட்டில் எங்களுக்கு முந்தய தலைமுறையை சேர்ந்த அம்மா இருந்தார். 70–90 ஆண்டுகளை ஒட்டிய இளமைக்காலம் கொண்ட எங்கள் தலைமுறை  மற்றும் எங்களால் வளர்க்கப்படும் அடுத்த தலைமுறையை சேர்ந்த எங்கள் குழந்தைகள். மூன்று தலைமுறைகள். மூன்று உலகங்கள். வேறு நிலங்கள். ஆனால் மனித மனம் மட்டும் காலத்தால் மாறவில்லை. அதே வலி ஆனால் அதன் வழிகள் மாறியிருந்தன. 

அந்தக் கதையின் கொடூரம் எங்களை எல்லோரையும் ஒரே நேரத்தில் பொசுக்கிருந்தது. அங்கே கனத்த அந்த சில நிமிட மௌனம், புழுக்கம், மேற்கொண்டு விவாதிக்காமலே என்னமோ எல்லாருக்குமே புரிந்தது.  

என் 96 வயது நிரம்பிய அம்மம்மா இன்றுவரை எந்த பொது இடத்திலும் சிறுநீர் கழிக்கமாட்டார், 28 மணிநேர விமானப்பயணமானாலும். சிறுவயதில், அதுவும் 19 வயதிலேயே கணவனை இழந்துவிட்ட ஒரு கைம்பெண்ணின் மனஉறுதி அது. 

சிலர் ஏதும் சொல்லாமல் வெளியே சென்று தண்ணீர் குடித்தனர். இரண்டு பேர் வெளியே சென்று சிறுநீர் கழித்து திரும்பி வந்தனர். யாரோ ஒருவர் அனைவருக்கும் மீண்டும் டீ கொண்டுவந்து கொடுத்தார். 

எல்லாரும் அந்த அசௌகரியமான நிமிடங்களை கடந்து போக விரும்பினோம். சரி அடுத்து கதை என்ன என்று ஆனந்த் கேட்க, அந்த வகையான கவனச்சிதறல் தான் எங்களுக்கு தேவைப்பட்டது. நான் அழியாக் கோலம் கதையை சொல்ல தொடங்கினேன்.

டிஜிட்டல் உலகில் எப்போதும் நிரந்தர தடங்கள்:

நாம் பகிரும் ஒவ்வொரு வார்த்தையும், கருத்தும், விமர்சனமும், லைக்கும், ஷேரும், படமும் —

அவை அனைத்தும் டிஜிட்டல் உலகில் நிரந்தர சாட்சிகள். நிர்வாணப் படம் ஒன்றும் சிறப்பானதோ, அதிர்ச்சியானதோ இல்லை அதுவும் ஒருவகையான நிரந்தர தடம். 

ஒரு நிர்வாணப் படத்தை யாராவது பகிர்ந்தால் அதனால் ஒரு மனிதன் குலுங்க / தவிக்க / உறைந்து போக / தண்டித்துக்கொள்ள வேண்டியதில்லை.

“இந்த உலகின் பாதி மனிதர்கள் உடலில் இருப்பதை தவிர யாருக்கும் வேறெதுவும் இல்லை” என்று சொல்லும் தைரியம் வேண்டும்.

“நான் யார் என்பதை என் உடல் தீர்மானிக்காது” என்று சொல்லும் நிமிர்வு வேண்டும்.

அந்த நிமிர்வை இந்தக் கதை எங்கள் கூட்டத்தில் உருவாக்கியது. நாம் நம் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டியது இந்த தெளிவுதான்! எந்த பயத்தையும் அல்ல!! 

அதற்குப் பிறகு வந்தது சந்திரிகா சொன்ன “ஜலப் பிரவேசம்”.

ஒரு எழுத்தாளருக்கு அவள் படைப்பின் மீதிருக்கும் ஆளுமை, அதே அளவுக்கு ஆதிக்கத்தை அவள் வாழ்க்கையில் செலுத்த நினைத்து உருவாக்கிய மர்மமான அழகியலுடன் கூடிய அந்த நிறைவு. 

ஒரு கதையின் முடிவை வாசகரிடம் ஒப்படைப்பது போல, கதாசிரியர் அவளது வாழ்க்கையின் முடிவையும் பார்வையாளனுக்கு ஒப்படைத்த அந்த நுண்ணிய கலை.

இந்தக் கதை எங்களை அமைதியாக்கியது, ஆசுவாசப்படுத்தியது, மலர்த்தியது. 

ஸ்ரீலதா சொன்ன “E = mc²

இந்தக் கதையைப் விவாதிக்கும் போது எல்லோருக்கும் ஒரே உணர்வு—

சுஜாதா எவ்வளவு நம்மை மிஸ் பண்ண வைக்கிறார்.

சி.எஸ்.கே. இந்தக் கதையை எழுதிய விதம், 

அதன் பாணி,

அதன் முடிவு—

அது ஒரு எழுத்து அல்ல,

அவரால் ஆசானுக்கு எழுதப்பட்ட மரியாதை.

சுஜாதா இருந்தால் இப்படித்தான் எழுதுவார் என்று நாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் நினைத்தோம்.

அந்த அனுபவம் முடிந்தபோது எங்கள் கூட்டம் ஒரே முடிவுக்கு வந்தது— சி.எஸ்.கே. ஒரு மாதத்துக்கு போதாது. அவரை இன்னும் ஒரு மாதம் வாசிக்க வேண்டும். அவரை தொடர்ந்து வாசிக்க வேண்டும். அவரை பின்தொடர வேண்டும்.

நாம் LitFest-ல் சந்தித்த இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை யாரும் முழுமையாக வாசிக்காததால் ஏற்பட்ட அந்த சிறிய சங்கடம்—அது தான் எங்களை இளம் எழுத்தாளர்களை மாதம் ஒரு முறை வாசிக்கத் தூண்டியது. இன்று பார்த்தால் அது ஒரு முடிவு அல்ல, ஒரு ஆசீர்வாதம். இளம் எழுத்தாளர்கள் பேசுவது நம் காலத்தின் பிரச்சினைகள். நம் குழந்தைகளின் உலகம். நம் சமூகத்தின் உடனடி உண்மைகள். மரபு எழுத்தாளர்கள் அவசியம்; அவர்கள் நம் அடித்தளம். ஆனால் இன்றைய எழுத்தாளர்கள் நம் கண்ணாடி. அந்த கண்ணாடியில் நம்மையும், நம் குழந்தைகளையும், நம் காலத்தையும் பார்க்காமல், நம் நுண்ணுணர்வை வளர்க்காமல், நாம் எதற்கு இலக்கியம் படிப்பது? 

இலக்கியம் எதற்காக? என்ற கேள்விக்கு இந்த சந்திப்பு ஒரு பதில். 

இன்று நான் உணர்ந்த மிகப் பெரிய உண்மை—இன்றைய எழுத்தாளர்களை வாசிப்பது ஒரு விருப்பம் அல்ல, ஒரு அவசியம்.

Comments

Popular posts from this blog

இலக்கிய பாலங்கள்: அ. முத்துலிங்கம் - 2nd சந்திப்பு - Nov 23, 2025

இலக்கிய பாலங்கள்: ஜெயமோகன் - 1st சந்திப்பு - Oct 24, 2025